24. வித்தியாசாகரரை நூலால் வென்றது! | தமிழ் கதைகள் | Vidyasagar was defeated by the book! | tenali Raman story

24. வித்தியாசாகரரை நூலால் வென்றது! | தமிழ் கதைகள் | Vidyasagar was defeated by the book! | tenali Raman story

ஒரு சமயம் வித்தியாசாகரர் என்னும் பண்டிதர் ஒருவர் ஒரிஸாவிலிருந்து விஜய நகரத்துக்கு வந்து இராயரின் ஆஸ்தான புலவர்களை வாதப்போட்டிக்கு அறைகூவியழைத்தார்.

இராயரின் அவையில் பெத்தண்ணா, திம்மண்ணா, சூரண்ணா முதலான ஏழு பெரும் புலவர்கள் இருந்தாலும் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலையிலே பாண்டித்யம் உள்ளவர்களாகையால் சகலகலா வல்லவராகவும், சகல விதமான சாஸ்திரங்களையும் கற்றறிந்தவருமான வித்தியாசாகரரை வெல்ல முடியாதென நினைத்துக் கவலையுடன் தலை கவிழ்த்தார்கள்.

ஆனால் தெனாலி ராமன் துள்ளியெழுந்து பாண்டித்ய போட்டியிட மறுநாள் வித்தியாசாகரரை வரும்படி ஏற்பாடு செய்தான். மறுநாள் அரசவைப் புலவர்கள் எல்லோரும் தன்னைப் புடைசூழ்ந்துவர ஆஸ்தான புலவர்களின் தலைமைப் பண்டிதனைப் போல் தெனாலிராமன் வேடமிட்டுக் கையில் பட்டுத் துணியால் சுற்றப்பட்ட மூட்டை போன்ற ஒன்றை எடுத்துக்கொண்டு விவாத மண்டபத்திற்கு வந்தான்.

அந்த மூட்டையை உற்று நோக்கிய வித்தியாசாகரர், “இது என்ன புத்தகம்?” என்றார். அதற்குத் தெனாலிராமன், “இதன் பெயர் திலகாஷ்ட மகிஷபந்தனம். நாளை இதன் உள்ளடக்கத்தைப் பற்றி நாமிருவரும் ஆழ்ந்து விவாதித்துப் போட்டியிடலாம் என்னை அந்த விவாதத்தில் வெல்ல முடியுமென்ற தைரியமிருந்தால் நாளை இங்கு வாரும்!” என்றான் தெனாலிராமன் கம்பீரமாக. 

tenali Raman
tenali Rama

தாம் கேள்விப்படாத புத்தகமாயிருக்கிறதே என்று விழித்து வித்தியாசாகரர், அன்றிரவு முழுவதும் எவ்வளவோ சிந்தித்தும் “திலகாஷ்ட மகிஷபந்தனம்” என்பதின் உட்பொருள் அவருக்கு விளங்காததால் அவமானத்திற்கு அஞ்சி பொழுது விடிவதற்குள் சொல்லிக் கொள்ளாமலே விஜயநகரத்தை விட்டு ஓடிவிட்டார்.

மறுநாள் அதையறிந்த அரசரும் , அரசவைப் புலவர்களனைவரும் தெனாலிராமனைப் புகழ்ந்து, “இராமா! உன் கையிலிருக்கும் புத்தக மூட்டையை அவிழ்த்துக் காட்டு! அதில் நீ இருப்பதாகக் கூறிய திலகாஷ்ட மகிஷபந்தனம் என்பது எவரும் கேட்டறியாத வினோதமான நூலாயிருக்கிறதே?” என்றனர். 

பட்டுத்துணியால் மூடப்பட்ட அதைப்பிரித்த இராயர் அதிலுள்ள எள், விறகு, எருமை கட்டும் கயிறு முதலானவற்றைக் கண்டு திடுக்கிட்டார். தெனாலிராமன் அமைதியாக “அரசே! எள்ளுக்குத் திலகமென்று மற்றொரு பெயருண்டு; காஷ்டம் என்றால் விறகு மகிஷபந்தனம் என்றால் எருமை கட்டும் கயிற்றால் கட்டப்பட்டிருக்கிறது என்று பொருள். 

இந்த உட்பொருளை உணரமுடியாமல் வித்தியாசாகரர் ஓடியதில் சிறிதும் ஆச்சரியமில்லை!” என்று சிரித்தான். சபையும் கொல்லென்று சிரித்தது. அரசரிடம் இராமன் ஒரு பொன்முடிப்பைப் பரிசாகப் பெற்றுக்கொண்டான்.



Leave a Comment