சோதிடம் பொய்யென நிரூபித்தல் | தமிழ் கதைகள் | If the astrology proves to be false | tenali Raman story
கிருஷ்ணதேவராயர் படையெடுத்து துங்கபத்திரை நதியைத் தாண்டி பகைவரான பீஜப்பூர் மன்னரை வெற்றி கொள்ளச் சகலமும் ஏற்பாடு செய்து விட்டார்.
அப்போது பகைவரிடம் லட்சம் பொன் லஞ்சம் வாங்கிக் கொண்டு இராஜத் துரோகியாகவும் தீர்மானித்துவிட்ட அரண்மனைச் சோதிடர் இராயரிடம் , “அரசே! இன்னும் ஒரு வருட காலத்திற்குத் தாங்களோ தங்கள் படையோ துங்கபத்திரை நதியைத் தாண்டிச் செல்லக்கூடாது! மீறிச்சென்றால் தங்களுக்கு மரணம் சம்பவிக்குமெனச் சோதிடம் கூறுகிறது!” என்று தடுத்தார்.
இராயர் வேறு வழியின்றி, “இந்தச் சோதிடம் முழுவதும் பொய்யென்று இங்கு யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு இலட்சம் பொன் பரிசளித்து இந்தச் சோதிடருக்கு மரணதண்டனை விதிப்பேன்!” என்று அறிவித்தார்.
உடனே தெனாலிராமன் துள்ளியெழுந்து “சோதிடரே! உமக்கு ஆயுள் இன்னும் எவ்வளவு இருக்கிறதென உம் சோதிடம் கூறுகிறது!” என்று கேட்டான். அதற்கு அவர், இன்னும் முப்பது வருஷங்கள்!” என்று கூறினார்.
உடனே தெனாலிராமன் வாளை உருவி “இல்லை ! இப்போதே இந்த ராஜத்துரோகியின் ஆயுள் முடியப்போகிறது!” என்று தலையை வெட்டி வீழ்த்தி அவருடைய சோதிடம் பொய் என்பதை நிரூபித்தான்.
அதன் பின்னர் இராயர் துங்கபத்திரையை தாண்டிப் படையெடுத்து வெற்றி பெற்று அந்த வெற்றிப் புகழ் தெனாலிராமனுக்கே உரியது என்று பாராட்டினார்.