12. கூனை நிமிர்த்த வழி | தெனாலி ராமன் கதைகள் | The crooked way | tenali Raman story
ஒரு கபட சந்நியாசி நாகதாளிப் பழத்திலிருந்து மயக்கமூட்டக் கூடிய விஷமருந்தொன்றை தயாரித்துக் கொண்டு கூனனான ஒரு சலவைத் தொழிலாளியின் உதவியால் ஊரிலுள்ள மூடர்களின் இல்லங்களை அறிந்து, அவ்விடங்களுக்குச் சென்று தன்னுடைய விஷமருந்தை தெய்வீகச் சித்த மருந்து என்று கூறிக்கொடுத்து பொன்னும், பொருளும், புகழும் சம்பாதித்து வந்தான்.
ஆனால் அவன் கொடுத்த அம்மருந்தினால் பலர் சித்தவெறி பிடித்தலைந்தார்கள். சிலர் உயிரிழந்தார்கள். இதை யூகித்து ஆத்திரங்கொண்ட தெனாலிராமன் அந்தச் சமூகத் துரோகியான சந்நியாசியை உபாயத்தின் மூலந்தான் வெல்ல வேண்டுமென்று ஒரு யுத்தி செய்து அந்த சந்நியாசியின் மருந்தினால் கொலைவெறி பிடித்து அலைந்த ஒரு பைத்தியக்காரனிடம் அந்தச் சந்நியாசியை தந்திரமாக அழைத்துச் சென்று தள்ளினான்.
உடனே சித்த வெறியன் அந்தச் சந்நியாசியின் மண்டையைப் பிடித்துத் தரையில் மோதியடித்துக் கொன்றான். இந்தக் கொலை அரண்மனை விசாரணைக்குச் சென்றது.
உடனே இராஜகுரு துள்ளியெழுந்து “அரசே சித்தவெறியன் மூலமாகச் சந்நியாசியைக் கொன்ற குற்றத்திற்காக தெனாலி ராமனை கழுத்தளவு புதைத்து யானைக்காலால் இடறச் செய்யவேண்டும்!” என்றார்.
இராயரும் அவ்வாறே செய்யும்படி உத்தரவிட்டார். தெனாலிராமனைப் பிடித்துச் சென்ற காவலாளிகள் இருவரும், ஒதுக்குப்புறமான ஒரு பொதுவிடத்தில் மண் தரையில் கழுத்தளவு ஆழம் வரை குழி வெட்டி தெனாலிராமனை அக்குழியில் இறக்கி, தலை நீங்கலாக கழுத்தளவு அவனைப் புதைத்து வைத்து விட்டு அவனுடைய தலையை மிதித்து நசுக்குவதற்கு யானையை அழைத்து வர இருவரும் சென்றனர்.
அப்போது சந்நியாசிக்கு உதவி புரிந்த கூனனான சலவைத் தொழிலாளி அந்தப்பக்கம் வெளுத்த துணிகளுடன் வந்து கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் தெனாலிராமன் அவனைக் கூவியழைத்து தந்திரமாக, “ஐயா! நான் ஒரு கூனன்.
என்னுடைய கூனைப்போக்க இம்மாதிரி குழியில் இருக்க வேண்டுமென்று ஒரு சித்த புருஷன் கூறினார். நான் வெளியே வந்து என் கூன் நிமிர்ந்துவிட்டதா என்று பார்க்கவேண்டும். அதனால் என்னை தயை செய்து வெளியே எடுத்துவிடு” என்றான்.
அவன் பேச்சை நம்பிய கூனன் அவனை அவ்வாறே விடுவித்தான். மேலே வந்த தெனாலிராமன் தன் கூன் நிமிர்ந்து விட்டதைக்கண்டு மகிழ்ச்சி கொள்ளுபவனைப் போல நடித்தான்.
உண்மையிலேயே கூனனான சலவைத் தொழிலாளிக்கும் தன் கூனை நிமிர்த்த வேண்டுமென்ற ஆசை வளர்ந்தது. அவன் விருப்பப்படியே அவனைக் குழிக்குள் இறக்கிவிட்டு அவ்விடம் விட்டுச் சென்று விட்டான் தெனாலிராமன்.
சற்று நேரத்திற்கெல்லாம் அங்கு யானையுடன் வந்த காவலாளிகள் குழிக்குள் இருப்பது யார் என்று பார்க்காமலேயே கூன் வண்ணானைக் கொன்று அவனது உடலில் கத்திகளைப் பாய்ச்சி இரத்தம் தோய்ந்த கத்திகளை அரசர் முன் காட்டினர்.
நகருக்கு வந்த தெனாலிராமன் அரசகுருவின் அக்கிரமத்தையும், கொலையுண்ட கபட சந்நியாசியின் கொடுமையையும் ஒருவரிடம் விளக்கி சொல்லி அரசரிடம் கூறும்படிச் செய்தான்.
உண்மையை அறிந்த அரசர், “நிரபராதியான தெனாலிராமனை யானைக்காலால் கொன்று இடறும்படிச் செய்துவிட்டோமே!” என்று வருந்தி அதுவே துக்கமாகக் கலங்கிக் கொண்டிருந்தார்.
அந்தச் சமயம் தெனாலிராமன் அங்கு வந்து தனக்கு உதவி செய்து அதனால் உயிரிழந்த கூனனின் மனைவிக்கு மாதாமாதம் அரண்மனையிலிருந்து பணம் கொடுக்கவும் ஏற்பாடு செய்தான்.