14. தெனாலிராமன் குதிரை வளர்த்தது | தமிழ் கதைகள் | Tenali Rama raised the horse | Tamil kathaikal
பகை நாடான பாமினி சாம்ராஜ்யத்தைக் குதிரைப் படையைக் கொண்டே வெல்ல விரும்பிய கிருஷ்ணதேவராயர் அரேபியாவிலிருந்து ஆயிரம் குதிரைக்குட்டிகளை வரவழைத்தார்.
அவற்றை குறைந்த செலவில் வளர்க்க வேண்டுமென ஆராய்ந்த மந்திரிசபை. “தலைநகரிலுள்ள ஒவ்வொரு பிரஜையும் ஒரு குதிரைக் குட்டியை நன்றாக வளர்த்துப் போர்க் குதிரையாக்க வேண்டும். அதற்காக தினமொன்றிற்கு கொள்ளு முதலான செலவுகளுக்கு மூன்று வராகன் பொன் கொடுக்கப்படும்.
குதிரைகளின் ஊட்டமான வளர்ச்சியை மூன்று மாதத்திற்கு ஒருமுறை மன்னரிடம் கொண்டு வந்து காட்ட வேண்டும்” என்று உத்தரவிட்டது. அதன்படி தெனாலிராமனுக்கும் ஒரு குதிரைக் குட்டியை வளர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால் அவன் தினந்தோறும் மூன்று வராகன்களை அரண்மனையிலிருந்து வாங்கிவந்து குடும்பத்திற்குச் செலவு செய்துவிட்டு, குதிரையைத் தன் கொல்லையில் கட்டி, அதைச் சுற்றி நாற்புறமும் சுவர் எழுப்பி, அதன் முகத்திற்கு நேராகச் சுவரில் ஒரு சிறு துவாரம் செய்து வைத்திருந்தான்.
தன் வீட்டின் தினந்தோறும் காய்ந்த புல்லை மட்டும் அந்த துவாரத்தின் வழியாகக் கொடுத்து வந்தான். குதிரைக் குட்டியும் பசி தாங்காமல் அதை “லபக்” கென்று பிடுங்கிக் கொள்ளும். இப்படியாக அந்தக் குதிரை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பசிபட்டினியால் வாடி வதங்கி வந்தது.
மூன்று மாதங்கள் சென்றதும், அரசர் முன்னர் அறிவித்திருந்தபடி மன்னர் பார்வை இடுவதற்காக தெனாலிராமனின் குதிரையைத் தவிர மற்றெல்லாக் குதிரைகளும் அரண்மனைக்கு வந்திருந்தன. எல்லாம் மேனி மினுமினுக்க, எலும்பே தெரியாமல் சதைப்பிடிப்பாக இருந்தன.
மிக்க மகிழ்ச்சியடைந்த இராயர், “தெனாலி ராமா! உன் குதிரையை மட்டும் ஏன் கொண்டு வரவில்லை?” என்று கேட்டார். அதற்கு, “அரசே, அந்தப் பொல்லாத முரட்டுக் குதிரையை என்னால் பிடித்துக் கொண்டு வரமுடியாது! உங்கள் குதிரை லாயத் தலைவரை அனுப்பினால் ஒரு வேளை அதைப் பிடித்துக்கொண்டு வரமுடியும்!” என்றான் தெனாலிராமன்.
“அவ்வளவு பலமான குதிரையாகவா வளர்த்திருக்கிறாய்?” என்று வியப்புற்ற இராயர் உடனே அந்தக் குதிரையைப் பிடித்துக்கொண்டு வரும்படி குதிரை லாயத்தலைவரான ஒரு அரேபிய வர்த்தகனை அனுப்பினார். அந்த அதிகாரிக்கு செந்நிறமான ஒரு முழ நீள தாடியுண்டு.
அந்த அதிகாரி ராமனுடன் சென்று புல்லைக் கொடுக்கும் துவாரத்தின் வழியாக குதிரையை எட்டி பார்த்தபோது. உள்ளேயிருந்த குதிரை தனக்கு வழக்கமாகப் புல் தரப்படுகிறது என்றெண்ணி, அந்த அதிகாரியின் தாடியை லபக் என்று கெட்டியாகப் பிடித்து இழுத்தது.
அதிகாரி அலறித் துடித்தார். உடனே உதவிக்கு அரண்மனையில் இருந்து ஓடிவந்த ஆட்கள் அந்த அதிகாரியின் தாடியை குதிரையின் வாய்ப்பிடியிலிருந்து கத்தரித்து விடுவித்து விட்டு குதிரையையும் வெளிப்படுத்தி இழுத்தார்கள்.
எலும்பும், தோலுமாய் நடக்கக் கூடச் சக்தியற்றிருந்த அந்தக் குதிரை இருந்த இடத்தைவிட்டு நகரக்கூட மறுத்தது. அதனால் மேலும் அரசாங்க சிப்பாய்கள் வந்து அக்குதிரையை பின்னாலிருந்து நான்குபேர் தள்ள முன்னாலிருந்து நான்கு பேர் இழுக்க, வெகு சிரமத்துடன் கொண்டுவந்து இராயர் முன் நிறுத்தினார்கள்.
அதைக் கண்டு ஆத்திரப்பட்டார் இராயர். “தெனாலி ராமா! சரியாகத் தீனி போடாமல் குதிரையை ஏன் இப்படி வளர்த்தாய்?” என்று கேட்டார்.
அதற்கு தெனாலிராமன், “அரசே! நான் கொஞ்சத் தீனி போட்டு வளர்த்ததற்கே இந்தப் பொல்லாத குதிரை திமிர்ப்பிடித்து உங்கள் லாயத் தலைவரின் தாடியைப் பிடித்துக் கொண்டு விடாமல் போராடவும், அதைப் பின்னாலிருந்து நான்குபேர் தள்ளவும் முன்னாலிருந்து நான்குபேர் இழுக்கவும் நேரிட்டதே?
அதற்கு அதிகமாகத் தீனிப் போட்டு வளர்த்திருந்தால் அது எத்தனை பேர் தாடிகளைப் பிடித்து இழுத்திருக்கும்! அதைப் போர்க்களத்திற்கு நகர்த்த எத்தனை பேர் தேவைப்பட்டிருக்கும்! மேலும் குதிரைகளின் தீனிக்காகத் தங்கள் சாப்பாட்டைச் சுருக்கி குதிரை வளர்த்த மற்றவர்களைப் போல நானும் மெலிந்துபோக நேரிட்டிருக்குமே!” என்றான்.
அதைக் கேட்டுச் சிரித்த இராயர், “குதிரைகளை வளர்ப்பதிலும் இராணுவத்தை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துவதைவிட அரசாங்கம் தன் குடிமக்களின் உணவு நலத்தில் அதிக அக்கறை கொள்ள வேண்டும்!” என்பதை தெனாலிராமனின் குறிப்பினால் உணர்ந்து வெட்கினார்.