10. பிராயச்சித்தம் செய்வது | தெனாலி ராமன் கதைகள் | Atonement | tenali Raman story

10. பிராயச்சித்தம் செய்வது | தெனாலி ராமன் கதைகள் | Atonement | tenali Raman story

புரோகிதர்களுக்கு சூடு போட்டு அவமானப்படுத்திய தெனாலிராமனைப் பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்த புரோகிதருக்கு ஒரு சந்தர்ப்பம் வலியவந்தது.

ஒரு முறை தெனாலி ராமனுக்கு எதிர்பாராமல் காய்ச்சல் ஏற்பட்டது. மிகவும் பயந்து போன அவன் மனைவி தன் கணவருக்கு தோஷ பரிகாரம் செய்ய அந்தப் புரோகிதரை வருந்திக் கூப்பிட்டாள்.

புரோகிதரோ சிறிதும் இரக்கமின்றி தெனாலி ராமன் மீது தனக்கு வஞ்சம் தீர்த்துக்கொள்ள அதுவே தக்க சமயம் என்று மகிழ்ந்து, “உன் கணவனான தெனாலி ராமன் அந்தணர்களுக்குச் போட்ட தோஷத்தினாலேயே அவனுக்குக் கடும் காய்ச்சல் வந்துள்ளது.

அந்தத் தோஷத்திற்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டுமானால் எனக்கு நூறு பொன் தட்சிணை கொடுக்க வேண்டும்” என்றார். அதற்கு தெனாலிராமனின் மனைவி “எங்களிடம் இப்போது நூறு பொன் இல்லை! என் கணவரிடமுள்ள அருமையான குதிரையை விற்றாவது பணந்தருகிறேன்!” என்றாள்.

அந்தக் குதிரை குறைந்தது இருநூறு பொன்னாவது விலை பெறும் என்று பேராசைப்பட்ட அந்தப் புரோகிதர் “அந்தக் குதிரையை என்ன விலைக்கு விற்றாலும் விற்ற பணம் முழுவதையும் எனக்குத் தரவேண்டும்!” என்று அவளிடம் வாக்குறுதி பெற்றுக்கொண்டு தெனாலிராமனுக்குத் தோஷ பரிகாரம் செய்தார்.

Tenali Raman

அதன் பலனாகவோ, வைத்தியத்தினாலோ ராமன் காய்ச்சலிருந்து குணமாகி எழுந்தான். ஒரு வாரத்திற்குப் பிறகு புரோகிதரின் தொந்தரவு பொறுக்க முடியாமல் தெனாலிராமன் தன் குதிரையை விற்க சந்தைக்குப் புரோகிதருடன் கிளம்பும்போது. கூடவே தன் வீட்டுப் பூனை ஒன்றையும் பிடித்துக் கொண்டு சந்தைக்குப் போனான்.

அவனுடைய குதிரை மிகவும் அபூர்வமான அரேபியக் குதிரையாதலால் அது சந்தையில் இருநூறு பொன்னுக்கு மேலாகவே விலைபோகும் என்று புரோகிதர் எண்ணினார். ஆனால் அங்கு ராமன் செய்த வியாபாரம் விசித்திரமாய் இருந்தது. அவன், “ஐயா ! என்னுடைய பூனையின் விலை இருநூறு பொன், குதிரையின் விலையோ ஒரு காசுதான். ஆனால் இரண்டையும் வாங்குபவர்களுக்கு தான் விற்பேன்!” என்றான். 

இதன் விலை எப்படி இருந்தால் என்னவென்று அவ்வாறே ஒருவன் பூனை, குதிரை இரண்டையும் சேர்த்து இருநூறு பொன் ஒரு காசுக்கு வாங்கிச் சென்றுவிட்டான். 

பூனை விற்ற விலையான இருநூறு பொன்னை மடியில் கட்டிக்கொண்ட ராமன், ஒரு காசை மட்டும் புரோகிதரிடம் கொடுத்து, “இந்தாரும், குதிரை விற்றுப் பணமாகிய ஒரு காசு!” என்றான். திடுக்கிட்டார் புரோகிதர். அன்றுமுதல் அவருடைய பேராசையும் அழிந்தது.



Leave a Comment