2. காளியை சிரிக்க வைத்த விகடம் | தமிழ் கதைகள் | The joke that made Kali laugh | tamil story
கோடைக்காலத்தில் தெனாலி நகரில் மழை பெய்யாததால் பெரும் வறட்சி உண்டாகி, குடிமக்கள் குடி தண்ணீருக்கே மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர். அந்தச் சமயம் ஒரு சந்நியாசி அவ்வூருக்கு வந்தார்.
அப்போது பெருமழை பெய்தது. உடனே ஊர்மக்கள் இந்தச் சந்நியாசி வந்ததால் தான் ஊரில் மழை பெய்தது என்று போற்றிப் புகழ்ந்தனர். ஆனால் இராமன் மட்டும் அதை ஒப்புக்கொள்ளாமல், தற்செயலாக நிகழ்ந்தது இது.
“பனைமரத்தில் காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்ததென்று சொன்ன கதைபோலிருக்கிறது” என்று சொல்லிச் சிரித்தான். முனிவர் கோபப்படாமல் வாய்விட்டுச் சிரித்து அவனுடைய அறிவுத் திறனையும், துணிச்சலையும் கண்டு வியந்தார்.
அவனை அன்புடன் தனியாக அழைத்துச் சென்று “ராமா, எனக்கு மரண காலம் சமீபித்து விட்டது. எனக்குத் தெரிந்த சக்திவாய்ந்த ஒரு பிரார்த்தனை மந்திரத்தைத் தகுதியான ஒரு சிஷ்யனுக்கு உபதேசிக்க வேண்டும்.
இல்லையெனில் நான் மறுபிறவியில் பிரம்மராட்சசனாய் பிறப்பேன்! இப்போது அறிவும் துணிவும் நிரம்பிய உன்னைவிடச் சிறந்த சிஷ்யன் எனக்குத் கிடைப்பதரிது.
அதனால் உனக்கு அந்த மாபெரும் பிரார்த்தனை மந்திரத்தைச் சொல்லி தருகிறேன். நீயும் இன்றிரவு நடுநிசி நேரத்தில் நீ காளி கோயிலுக்குத் தனியாகச் பத்திரகாளியின் சந்நிதியில் நின்று இந்தப் பிரார்த்தனை மந்திரத்தை ஆயிரத்தெட்டு முறை ஜெபித்தாயானால் அம்மன் ஆயிரந் தலைகளுடன் கோரரூபமாய் உன் முன் பிரசன்னமாவாள்.
நீ சிறிதும் பயப்படாமல் காளியிடம் விரும்பும் வரத்தைப் பெற்றுக் கொள்!” என்று கூறி, மந்திரத்தை உபதேசித்து கானகத்தில் சமாதி அடையச் சென்றார்.
அவர் கூறியவாறே ராமன் அன்றிரவில் காளி கோயிலுக்குச் சென்று முறைப்படி ஜெபித்தான் பத்திரகாளி கண்களில் கனல்கக்க, கோரப் பற்களில் பிசாசுகளின் ரத்தம் சிந்த, இரண்டு கைகளுடனும், ஆயிரந் தலைகளுடனும் நடுநடுங்கும்படி அதிகோர உருவமாய்த் தோன்றி சூலாயுதத்தை தரையில் ஓங்கிக் குத்தி இடிபோன்ற குரலில் “யாரடா அவன் என்னை அழைத்தவன்?” என்று சீறினாள்.
கண்டவர் ராமன் சிறிதும் அஞ்சாமல் காளியின் முகங்களைப் பார்த்து, இடி இடியென்று சிரித்தான். பத்திரகாளி உக்கிரமுற்று, “அடே! என்னைப் பார்த்து ஏனடா சிரிக்கிறாய்?” என்று சீறினாள்.
அதற்கு ராமன், “தாயே! மனிதனாகிய எனக்கு ஜலதோஷம் பிடித்துக் கொண்டால், மூக்கைச் சிந்தவே இரண்டு கைகள் போதவில்லை! ஆயிரம் முகங்கள் படைத்த உனக்கு ஜலதோஷம் பிடித்துக் கொண்டால் ஆயிரம் மூக்குகளையும் சிந்த இரண்டே கைகள் தானே இருக்கின்றன?
மூக்குகளை சிந்த எப்படித் திண்டாடுவாயோ என்று கற்பனை செய்து பார்த்தேன். எனக்குச் சிரிப்பு வந்தது!” என்று கலங்காமல் கூறினான்.
அவனுடைய நகைச்சுவையை ரசித்த காளி தானும் இடி இடியென்று சிரித்து “அடே ராமா! என்னைப் பார்த்தே பரிகாசமாய் விகடம் செய்து விட்டாயே! இன்று முதல் நீ விகடகவியாக விளங்கக் கடவாய்!” என்றாள்.
“விகடகவியா? ஆகா, எனக்குப் பிரமாதமான பட்டந்தான்! வி ……………. வி! எழுத்தை இப்படித் திருப்பிப் பார்த்தாலும் அப்படித் திருப்பிப் பார்த்தாலும் மாறாமல் விகடகவி தான்!” என்று ராமன் சிரித்தான்.
அவனுடைய அறிவாற்றலைக்கண்டு மகிழ்ந்த காளி, தன்னுடைய வலது கையிலும், இடது கையிலும் இரண்டு பொற்கிண்ணங்களையும் எடுத்துக் காண்பித்து, “விகடகவியே! என் வலது கையிலிருக்கும் பால் கிண்ணத்தில் ஞானப்பால் இருக்கிறது.
இடது கையிலுள்ள தயிர்க் கிண்ணத்தில் கட்டித் தயிர் போன்ற செல்வம் இருக்கிறது. உனக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுத்துக் கொள்!” என்றாள்.
ராமன், “தாயே! இரண்டையும் ருசி பார்க்காமல் எப்படித் தேர்ந்தெடுக்க முடியும்!” என்று கூறி அவ்விரு கிண்ணங்களையும் வாங்கிப் பாலையும் தயிரையும் ஒன்றாக லபக்கென்று குடித்துவிட்டு, “தாயே ! எனக்குத் அறிவுப்பால், செல்வத்தயிர் இரண்டுமே வேண்டும்.
ஒன்று இருந்து இன்னொன்று இல்லையென்றால் வாழ்க்கை ருசியற்றதாயும் துயரம் நிறைந்ததாயும் ஆகிவிடும்! அதனாலன்றோ இரண்டையும் உன் கரங்களில் வைத்திருக்கிறாய்! தாயான நீயே அப்படி எண்ணும்போது உன் மகனாகிய நான் இவ்வாறு எண்ணிச் செய்ததில் தவறில்லை!” என்றான்.