4. கண்ணால் ஜால வித்தைக்காரனை வென்றது | தெனாலிராமன் கதைகள் The eye won the web magician | Tenali Raman story
கிருஷ்ண தேவராயரின் மாபெரும் அரசவைக்கு தெனாலிராமன் சென்ற சமயம் இராயர் தம் மந்திரிப் பிரதானிகள் புடைசூழ அவையில் கொலு வீற்றிருந்தார்.
இராஜகுருவால் சிபாரிசு செய்யப்பட்ட ஒரு ஜால அபூர்வமான வித்தைக்காரனின் செப்பிடி வித்தைகளைக் கண்டுகளித்துக் கொண்டிருந்தார்.
அந்த வித்தைக்காரன் அகம்பாவத்துடன் “என்னை வித்தையில் வெல்ல எவருமில்லை! ஆயிரம் பொன் பொருள் பரிசு கொடுத்தாலும் இதுபோன்ற ஜால வித்தைகளை அரசர் பிரான் காண முடியாது” என்று கூறினான்.
அப்போது அங்கு வந்த தெனாலிராமன் அந்தச் செப்பிடி வித்தைக்காரனை நோக்கி, “நான் கண்ணை மூடிக் கொண்டு செய்யும் காரியத்தை நீ கண்ணைத் திறந்து கொண்டு செய்ய முடியாது!” என்று போட்டிக்கு அழைத்து “நீ போட்டியில் ஜெயித்தால் ஆயிரம் பொன்னை நீ எடுத்துக்கொள்! இல்லாவிட்டால் நான் எடுத்துக் கொள்வேன்!” என்றான்.
ஆத்திரமடைந்த ஜால வித்தைக்காரன், “சிறுவனே நீ கண்ணை மூடிக்கொண்டு செய்யும் காரியத்தை என்னால் செய்ய முடியாதா என்ன?” என்று ஜம்பமாக மீசையை முறுக்கி அந்தச் சவாலை ஏற்றுக் கொண்டான்.
உடனே ராமன் உட்கார்ந்து தன் இரு கண்களையும் இறுக மூடிக்கொண்டு இரண்டு கைகள் நிறைய மணலை எடுத்து மூடிய தன் கண்களின் மீது கொட்டிக் கொண்டான். பிறகு எழுந்து வித்தைக்காரனை நோக்கி, “இம்மாதிரி நீ கண்களைத் திறந்து கொண்டு செய் பார்க்கலாம்!” என்றான்.
அதைக் கேட்டு திடுக்கிட்ட வித்தைக்காரன் கைகளைப் பிசைந்து கொண்டு தன் தோல்வியை ஒப்புக் கொண்டான்.
அவையில் கூடியிருந்தவர்கள் அனைவரும் வாய்விட்டுச் சிரித்தனர். அரசர் மகிழ்ந்து போட்டியின் நிபந்தனைப்படி ஆயிரம் பொன்களையும் தெனாலிராமனுக்குப் பரிசாக அளித்து, “நாளையும் நீ நம் ராஜசபைக்கு வா!” என்றார்.