தெனாலிராமன் பூனை வளர்த்தது | தெனாலிராமன் கதைகள் | Tenali Rama raised the cat | tenali Raman stories
விஜய நகரத்திலுள்ள பெருச்சாளிகள், எலிகள் முதலியவற்றின் தொல்லைகளை நீக்குவதற்காக பெர்ஷிய நாட்டிலிருந்து ஆயிரக் கணக்கில் பூனைக் குட்டிகளை இராயர் தருவித்து ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு பூனையைக் கொடுத்து, அதற்குப் பசும்பால் கொடுத்து வளர்ப்பதற்காக ஒரு பசுவும் கொடுத்தார்.
தெனாலிராமனோ தான் வாங்கி வந்த பசுவின் பாலையெல்லாம் கறந்து பூனைக் குட்டிக்கு வைக்காமல், தானும் தன் மனைவி மக்களுமாகக் குடித்துவிட்டு பூனையை வெறுமனே விட்டு வைத்தான்.
குறிப்பிட்ட ஒரு தினத்தில் பூனைகளைப் பார்வையிடுவதற்காக இராயர் அனைவரையும் அரண்மனைக்கு வரவழைத்தார். எலும்பும் தோலுமான பிரஜைகள் தாங்கள் வளர்த்த கொழு கொழுவென்ற பூனைகளைத் தூக்கி வந்து காட்டினார்கள்.
கொழுகொழுவென்று வளர்ந்திருந்த தெனாலிராமனோ பட்டினியால் மெலிந்து போன பூனையை தான் காட்டினான். அதைக்கண்டு ஆத்திரமுற்ற இராயர் “ராமா உன் பூனைக்குப் பால் வைக்காமல் ஏன் பட்டினி போட்டாய்?” என்று கேட்டார்.
அதற்குத் தெனாலிராமன், “அரசே! என் பூனை பாலைக் கண்டாலே சாப்பிடாமல் ஓட்டமெடுக்கிறது. நான் என்ன செய்வேன்?” என்றான்.
அதைக்கேட்டு ஆச்சரியமடைந்த அரசர் “ராமா! இதென்ன பால் குடிக்காத பூனையும் பூலோகத்தில் இருப்பது உண்டோ? நீ கூறுவது உண்மையானால் உனக்கு நூறுபொன் பரிசளிப்பேன்!” என்று கூறிவிட்டு அந்தப் பூனையின் முன்னால் பாலை வைக்கும்படிச் செய்தார்.
பாலைக் கண்டதுமே அந்தப் பூனை ஓட்டமெடுத்தது. வியப்புடன் சிப்பாய்கள் அதைப் பிடித்து வந்து சோதித்தபோது அரசர் அதன் வாயிலுள்ள வெந்த புண்களைக் கண்டு ராமனின் யுக்தியை யூகித்து கொண்டு, “அட நயவஞ்சகா! பாலைச் சுடச்சுடக் காய்ச்சிப் பூனைக்கு வைத்தாயா? அதுதான் சூடுகண்ட பூனை பாலைக் கண்டதும் ஓட்டம் பிடிக்கிறது!” என்றார்.
தெனாலிராமன் துணிவாக ஆனால் பணிவுடன், “அரசே! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் பூனைக்குப் பாலூற்றிப் போற்றி வளர்ப்பதைவிட குடிமக்கள் அனைவருக்கும் பாலுணவு கிடைக்கும்படி பராமரிப்பதே மன்னனின் முதற் கடமையென்று கருதுகிறேன்!” என்றான்.
இராயர் அவனுடைய புத்தி நுட்பத்தைப் பாராட்டி நூறு பொன் பரிசளித்தார்.