சனி நீராடு | ஆத்திசூடி கதைகள் | shower with clean cold water | tamil kathaigal
மகாராஜபுரத்தில் மருதப்பன் என்பவன் வாழ்ந்து வந்தான். மருதப்பன் நல்ல உழைப்பாளி.
எந்த கெட்ட பழக்கத்தையும் தன்னோடு நெருங்க விடாமல் ஒழுக்கத்துடன் வாழ்ந்து வந்தான். ஒரு சில நாட்களாக மருதப்பனுக்கு உடல் நிலை சரியில்லாமலானது.
உடல் நிலையானது தொடர்ந்து அலுப்பினைக் கொடுக்கவே, மருதப்பன் மிகவும் கஷ்டப்பட்டான் அவனால் எந்த வேலையையும் சரிவரச் செய்ய முடியவில்லை.
நல்ல உழைப்பாளியான மருதப்பன் நோயால் கஷ்டப்படுவதைக் கண்டு, அந்த ஊர் மக்கள் எல்லோரும் ஆச்சர்யமடைந்தார்கள்.
அந்த ஊரில் வாசுதேவன் என்ற பெரியவர் இருந்தார் . அந்த ஊர் மக்கள் யாராவது துன்பப் பட்டால் அவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வரலானார்.
மருதப்பனின் கஷ்டத்தைக் கேள்விப்பட்ட அவர் ஒருநாள் மருதப்பனின் வீட்டிற்குச் சென்றார். மருதப்பன் உடல் வலியால் அவதிப்படுவதைக் கண்டார்.
உடனே அவனைப் பார்த்து “மருதப்பா! உன் உடல் வலிக்கு மருந்து கண்டுபிடித்து விட்டேன். நாளை சனிக்கிழமை. நீ நாளை காலையில் எழுந்ததும் உடல் முழுக்க நன்றாக எண்ணெய் தேய்க்க வேண்டும்.
சிறிது நேரம் கழித்து ஆற்றுக்குச் சென்று ஆற்று நீரில் மூழ்கிக் குளிக்க வேண்டும். வாரம் தவறாமல் தொடர்ந்து ஒவ்வொரு சனிக் கிழமையும் எண்ணெய் தேய்த்துக் குளித்து வந்தால் உன் நோயெல்லாம் குணமாகி உன் உடல் வலியெல்லாம் மறைந்து நீ புத்துணர்ச்சியைப் பெற்றுவிடுவாய்” என்று கூறினார்.
மறுநாள் அதனைக் கேட்ட மருதப்பனும், காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து ஆற்றில் சென்று குளித்தான். பின்னர் வாசுதேவனைத் தேடிச் சென்றான்.
வாசுதேவன் உடனே மருதப்பனை ஊர்க் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். கோயிலில் மருதப்பன் நவக்கிரகங்களை சுற்றி வந்து சனிபகவானை வணங்கினான்.
வாசுதேவன் சனிபகவானை வணங்கியபடி மருதப்பனின் உடல் வலியெல்லாம் குணமாகும்படி வேண்டிக்கொண்டார். பின்னர் இருவரும் வழிபாட்டினை முடித்துக் கொண்டு கோயில் மண்டபத்தில் வந்து அமர்ந்தார்கள்.
அந்த நேரம் மருதப்பன் வாசுதேவனிடம் “ஐயா! காலையில் கண் விழித்ததும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்படி கூறி விட்டு, பின்னர் என்னைக் கோயிலுக்கு அழைத்து வந்தீர்களே எதனால்?” என்று கேட்டான்.
அதனைக் கேட்ட வாசுதேவன் “மருதப்பா! காலையில் நீ உடல் வடிய எண்ணெய் தேய்த்து குளிப்பதால் தோலில் உள்ள கிருமிகள் எல்லாம் எண்ணெய்யோடு வடிந்து தண்ணீரில் கலந்து விடுகிறது.
உடல் குளிர்ச்சி பெற்று, உடலில் ஏற்பட்டிருக்கும் சூடு தணிகிறது. சிந்தனைகள் வளர்கிறது. உஷ்ணத்தால் ஏற்படுகின்ற வியாதிகளில் இருந்து இந்த எண்ணெய் குளியல் உன்னை பாதுகாக்கின்றது.
உனக்கு ஏற்பட்ட உடல் வலியும் உஷ்ணத்தால் ஏற்பட்டது தான். மேலும் நீ கோயிலுக்கு வந்து இறை வழிபாட்டினை செய்வதால் உன் மனது தூய்மையடைகிறது. உன் மனதில் நல்ல சிந்தனை வளர்கிறது.
அதனால் தான் உன்னைக் கோயிலுக்கு அழைத்து வந்தேன்” என்று கூறினார் வாசுதேவன். மருதப்பனும் அன்றிலிருந்து வாரந்தோறும் சனிக்கிழமையானால் எண்ணெய் தேய்த்துக் குளித்து இறைவழிபாட்டில் கவனம் செலுத்தி வந்தான்.
அவனது உடல்களைப்பெல்லாம் மறைந்து போனது. Sஒவ்வொரு நாளும் புத்துணர்ச்சியோடு செயல்பட ஆரம்பித் தான்.
தன்னை நல்வழிப்படுத்தி நற்பழக்கத்தைக் கற்றுக் கொடுத்த வாசுதேவனுக்கு நன்றி கூறினான். மருதப்பன் சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து குளிப்பதைக் கண்ட அவன் நண்பர்களும் அதே பழக்கத்தைக் கடைபிடிக்கத் தொடங்கி விட்டார்கள்.
நீதி:
சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளித்து வழிபாடு செய்தால் உடல் நலத்திற்கு நல்லது.