ஙப் போல் வளை | ஆத்திசூடி கதைகள் | Preserve the bonds | tamil kathaigal
குரங்காட்டி ஒருவரிடம் ரங்கன், மங்கன் என்ற இரண்டு குரங்குகள் இருந்தன. குரங்காட்டி அவ்விரண்டு குரங்குகளையும் வித்தை காட்டிப் பிழைக்க வேண்டி அந்த குரங்குகளுக்கு சில வித்தைகளையும் கற்றுக் கொடுத்து வந்தார்.
ரங்கன் குரங்காட்டியின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு அவர் என்ன செய்யச் சொல்கின்றாரோ அதன்படியே செய்து வந்தது. ஆனால் மங்கனோ குரங்காட்டியின் கட்டளைக்கு அடிபணியாமல் முரண்டு பிடித்து வந்தது.
வித்தைகளை சரியாகச் செய்யாமல் எந்த நேரமும் சும்மாவே நின்று கொண்டிருந்தது. குரங்காட்டியும் எப்படியாவது ரங்கனைப் போன்று, மங்கனையும் வித்தை காட்டுகின்ற பயிற்சியில் ஈடுபடுத்திவிட வேண்டுமென்று வெகுநாட்களாக முயற்சி செய்து கொண்டிருந்தார்.
தன் நண்பன் மங்கனின் பிடிவாதத்தை உணர்ந்த ரங்கன் ஒருநாள் மங்கனை அழைத்து “நண்பா! நீ ஏன் இந்தக் குரங்காட்டிக்கு அடி பணியாமல் இருக்கின்றாய்? ஏதோ நம் தலைவிதி இப்படி அவரிடம் மாட்டிக் கொண்டோம்.
இனிமேல் அவரின் மனதைப் புண்படுத்தாமல் அவருக்கு நம்மீது கோபம் ஏற்படாத வகையில் நடந்து கொண்டு அவருக்கு வளைந்து கொடுத்து வாழ்வோம். அவரோடு நாம் பகைத்துக் கொண்டால் நமக்குத் துன்பம் தான்” என்று கூறியது.
அதனைக் கேட்ட மங்கன் “நண்பனே! நீ சரியான பயந்தாங்கொள்ளியாக இருக்கின்றாய்! நான் இப்படிக் குரங்காட்டியின் கட்டளைக்கு அடிபணியாமல் இருப்பதால் ஒருவேளை அவர் என்னை வெளியே விட்டாலும், விட்டுவிடுவார்.
நீ அவருக்கு அடிபணிந்து நடப்பதால் உன்னை அவர் வசமே வைத்துக் கொள்வார். நீ காலம் பூராவும் அவருக்கு அடிமையாகயிருந்து கஷ்டப்பட வேண்டியதுதான். உனது பேச்சை நம்பி நான் என்னை அவருக்காக விட்டுக்கொடுக்கமாட்டேன்” என்றது மங்கன்.
மங்கனிடம் பேசி இனிமேல் எந்தப் பயனுமில்லை என்பதை உணர்ந்த ரங்கன், அதன் பின்னர் அமைதியாகிவிட்டது. அன்று குரங்காட்டி வழக்கம்போல் ரங்கனுக்கும், மங்கனுக்கும் வித்தை விளையாட்டுப் பயிற்சியினைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
ரங்கன் அடக்கத்துடன் குரங்காட்டியின் வித்தைகளை எல்லாம் கற்றுக் கொண்டிருந்தது. மங்கன் வழக்கம்போல் சும்மாவே நின்று கொண்டிருக்க, குரங்காட்டிக்குக் கோபம் வந்து விட்டது.
மங்கனைப் பிடித்துக் கொண்டுபோய் ஒரு சர்கஸ் கம்பெனியில் விற்றுவிட்டார். சர்கஸ் கம்பெனியில் மங்கனுக்குச் சரியான உணவு கிடைக்கவில்லை.
அங்கே குரங்காட்டியை விடவும் அதிகமாக மங்கனுக்குப் பயிற்சி கொடுக்கத் துவங்கி விட்டார்கள்.
மங்கன் மிகவும் வருத்தப்பட்டது. தன் நண்பன் ரங்கன் கூறியபடி குரங்காட்டியிடம் வளைந்து கொடுத்து வாழ்ந்திருந்தால் நமக்கு இந்த அளவுக்குத் துன்பம் நேர்ந்திருக்காதே! என்று மிகவும் கவலைப்பட்டது.
நீதி:
மற்ற எழுத்துக்களுக்கெல்லாம் வளைந்து கொடுத்து ஒலிக்கும் ங எழுத்தைப்போல் வளைந்து கொடுத்து வாழவேண்டும்.