இணக்கம் அறிந்து இணங்கு | ஆத்திசூடி கதைகள் | Make friend with the best | tamil story
குளத்தில் வசித்து வந்த மீனும், கொக்கும் மிகவும் நட்போடு பழகி வந்தன. மீன் கொக்கோடு நெருக்கமாகப் பழகுவதைக் கண்ட மற்ற மீன்கள் “நண்பனே! நீ அந்தக் கொக்கோடு நெருக்கமாகப் பழகுவதால், எந்த நேரமும் உனக்கு ஆபத்து வரலாம்.
அதனால் நீ அதனோடு பழகுவதை விட்டுவிடு” என்று அறிவுரை கூறின. அதைக் கேட்ட மீன் “நண்பர்களே! நீங்கள் நினைப்பது போல் அந்தக் கொக்கு கொடியதில்லை, என்னை அதன் உடன் பிறந்த சகோதரன் போல் நினைத்துப் பழகி வருகிறது.
அதனால் எனக்கு ஆபத்து வரும் என்பதை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது” என்று கூறியது. மீனின் நம்பிக்கையான பேச்சைக் கேட்ட மற்ற மீன்கள் இனிமேல், நம் நண்பனிடம் எதைச் சொன்னாலும் அவன் திருந்தப் போவதில்லை என்று மூடிவு செய்து அமைதியுடன் சென்று விட்டன.
ஒரு நாள் மாலை வேளையில் கொக்கு குளக்கரை ஓரமாக வந்தது. கொக்கின் வருகைக்காகக் காத்திருந்த மீனும் குளக்கரையோரமாக ஒதுங்கியபடி நீந்தி வந்து “நண்பனே நலமா?” என்று கொக்கைப் பார்த்துக் கேட்டது.
உடனே கொக்கு “நலம் தான் நண்பனே! உன்னிடம் ஒரு செய்தியைச் சொல்லவே இப்போது வந்தேன்” என்றது. அதனைக் கேட்ட மீன் ஆச்சர்யத்துடன் “நண்பனே! அதென்ன செய்தி? உடனே கூறு!” என்று ஆவலோடு கேட்டது.
அதனைக் கேட்ட கொக்கு “நண்பனே! நான் பறந்து வருகின்ற வழியில் அழகான ஒரு தெப்பக் குளத்தைப் பார்த்தேன். அந்தத் தெப்பக் குளத்தில் நீ வசித்தால், எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்.
நானும் உன்னைத் தேடிக்கொண்டு இவ்வளவு தூரம் வரையிலும் பறந்து வர வேண்டிய அவசியமில்லை” என்று கூறியது. அதனைக் கேட்ட மீன் “நண்பனே! உன் விருப்பம் எதுவானாலும் அதனை நிறைவேற்ற நான் தயாராக இருக்கின்றேன்.
இப்பொழுதே அந்தத் தெப்பக்குளத்திற்குப் புறப்பட்டு வர நான் தயார். ஆனால் நான் எப்படி உன்னோடு வரமுடியும்?” என்று கவலையுடன் கேட்டது. உடனே கொக்கு “நண்பனே ! நான் அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்துள்ளேன்.
உன்னை நான் என் அலகில் பிடித்துக் கொண்டு தெப்பக்குளத்திற்குப் பறந்து சென்று தெப்பக்குளத்து நீரில் இறக்கி விடுகிறேன்” என்று கூறியது. மீனும் கொக்கின் ஆலோசனைக்கு சம்மதம் தெரிவிக்க, உடனே கொக்கானது மீனைத் தன் அலகில் பிடித்து வைத்துக் கொண்டு ஆகாயத்தை நோக்கிப் பறக்கத் தொடங்கியது.
வெகு நேரமாக கொக்கு ஆகாயத்திலேயே வட்டமடித்தபடி பறந்து கொண்டிருந்தது . உடனே மீன் “நண்பா! எனக்கு மூச்சு திணறுகின்றது. உடனே தெப்பக்குளத்தில் என்னை இறக்கிவிட்டுவிடு” என்று அவசரப் படுத்தியது.
ஆனால் கொக்கோ அதனைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் மெல்ல, மெல்ல மீனை விழுங்க வேண்டி தன் அலகினை மேலும் விரித்தது. மீன் உடனேயே கொக்கின் தந்திரத்தைப் புரிந்து கொண்டது.
நம் நண்பர்கள் சொன்னது சரிதான். இந்தக் கொக்கு நம்மைத் தந்திரமாக ஏமாற்றி இரையாக்கிக் கொள்ள நினைக்கின்றது. இதனிடமிருந்து எப்படியாவது நாம் தப்பிக்க வேண்டும் என நினைத்த மீன் கொக்கின் அலகிலிருந்து திமிறியபடி துள்ளி வெளியே குதித்தது.
வேகமாகக் கீழே பாய்ந்தது. இதனை எதிர்பாராத கொக்கு, மீண்டும் கீழே பறந்தபடி மீனைப் பிடிக்க முயற்சி செய்தது.
ஆனால் மீனோ மீண்டும் துள்ளியபடி வேகமாகக் கீழே வர, அதிர்ஷ்டவசமாக நீர் நிரம்பிய ஒரு கிணற்றுள் விழுந்துவிட்டது. தண்ணீருக்குள் நீந்தியபடி கரையின் மேல் இருக்கும் கொக்கைப் பார்த்தது. ஆனால் கொக்கினால் கிணற்றின் உள்ளே பறந்து சென்று மீனைப் பிடிக்க முடியவில்லை.
ஏமாற்றத்துடன் திரும்பியது. இனிமேல் கொக்கைப் போன்ற நண்பர்களோடு நட்பு வைக்கக்கூடாது . யாரிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டது மீன்.
நீதி:
ஒருவருடைய குணத்தையறிந்து அவர்களுடன் பழகுவது நல்லது.
இக்கதையை pdf வடிவில் வாசிப்பதற்கு 👇👇👇
இக்கதையை Download செய்ய கீழே இருக்கும் button-ஐ click பண்ணவும்..