சரயு ஆற்றங்கரையில் ஒரு யாசகனும் அவன் மனைவியும் வசித்து வந்தார்கள். சிறிய குடிசை ஒன்றில் வசித்துக்கொண்டு, எளிமையான துணிகளை உடுத்துக்கொண்டு, பக்கத்துக் கிராமங்களில் மக்கள் கொடுப்பதை உண்டு, அவர்கள் திருப்தியுடன் வாழ்ந்து வந்தார்கள்.
ஆனால் இந்தத் திருப்திக்கு ஒரு குறையாக அவர்களுக்குக் குழந்தை இல்லை. ஒரு குழந்தையைச் தத்தாவது எடுத்துக் கொள்ளலாமே என யாசகனின் மனைவி மிகவும் ஏங்கினாள். யாசகனும், பக்கத்துக் கிராமங்களில் யாராவது ஒரு குழந்தை தத்து கொடுப்பார்களா என்று வீட்டுக்கு வீடு கேட்டுப் பார்த்தான். அந்த ஏழைகளுக்கு ஒரு குழந்தையை தத்துக் கொடுக்க யாரும் முன்வரவில்லை.
யாசகனிடம் பணம் இல்லை என்றாலும் சில அமானுஷ்ய சக்திகள் இருந்தன. ஒருநாள் அவன் குடிசைக்கு வெளியே உட்கார்ந்து கொண்டிருந்தபோது, உயரே பறந்த ஒரு காக்கையின் மூக்கிலிந்து ஒரு சுண்டெலி இழே விழுந்தது. மனைவி அதை எடுத்துக் கருணையுடன் தடவிக் கொடுத்தாள்.
பிறகு தன் கணவனைப் பார்த்து, “நமக்குத் தான் யாரும் குழந்தை கொடுக்க மாட்டோம் என்கிறார்களே, நீயாவது உன் சக்தியை உபயோகித்து இந்தச் சுண்டெலியை ஒரு குழந்தையாய் மாற்றேன்!” என்றாள். உன் மகிழ்ச்சிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன், என்று அவனும் புன்முறுவலுடன் ஒத்துக் கொண்டான்.
ஏதோ மந்திரத்தை உச்சரித்து, கமண்டலத்திலிருந்து தீர்த்தத்தைச் சுண்டெலி மேல் தெளித்தான். அவ்வளவுதான், அது ஒரு அழகிய பெண் குழந்தையாய் மாறிவிட்டது. மனைவியும் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டாள். குஞ்சு எலிக் குழந்தைக்கு குஞ்சலி என்று அருமையுடன் பெயர் சூட்டி சீராட்டி வளர்த்தார்கள்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் குஞ்சலி வளர்ந்தாள். ஒளவையார் போல இலக்கியத்தில் புலமை பெற்றாள். லீலாவதி போல கணிதத்தில் தேர்ந்தாள். ஆதிரை போல ஆடல் பாடலில் சிறந்தாள். குஞ்சலிக்குக் கல்யாண வயது வந்ததும், இந்த சகலகலாவல்லிக்கு நல்ல மாப்பிள்ளை தேட வேண்டுமே என்ற கவலை பெற்றோருக்கு வந்தது.
“சுண்டெலியைச் சுந்தரியாக்கிய மந்திர வல்லான் நீ. நம் மகளுக்கு நல்ல மாப்பிள்ளை பெறுவதில் உன் மந்திரத்தைக் காட்டு” என்றாள் தாயார். “கட்டாயம் என் செல்வியை மணம் புரிந்திடு என்றால் சூரியனே என் சொல் தட்டமாட்டான்” என்றான் யாசகன்.
நிஜமாகவா என்று மகிழ்ச்சி பொங்கக் கேட்டாள் மனைவி. “அப்படியானால் அந்த ஆதவனே நம் மருமகனாய் வரட்டும். காட்டு பார்ப்போம் உன் சக்தியை”. “இதோ!” என்றான் யாசகன். கண்களை மூடிக்கொண்டு ஏதோ தியானம் செய்தான்.
திடீரென தினகரன் அவர்கள் முன் தோன்றினான். “பகலவனே, போற்றி! என் மகளை மணம் புரிந்திடுவாய்” என்று யாசகன் வேண்டினான்.
“எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் உன் மகளுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா?” என்று ஆதவன் கேட்டான். யாசகனும் மகளைக் கூப்பிட்டு அவள் விருப்பத்தைக் கேட்டான். “அப்பா, நீ பார்த்திருக்கும் மாப்பிள்ளை நல்லவன் தான். ஆனால் பிரகாசம் கொஞ்சம் அதிகமாயிருக்கிறதே, இவனைவிடச் சிறந்தவனாய், பெரியவனாய், கிடைக்க மாட்டானா?”என்றாள் அவள்.
“மகா சக்திமானாகிய மார்த்தாண்டனைவிட நல்ல மாப்பிள்ளையா?’ என்று தகப்பன் திகைத்தான். அவள் தயங்கியதைப் பார்த்த சூரியன், “மேகம், என்னைவிடச் சிறந்த பெரிய ஆள் என்றே நினைக்கிறேன். என்னுடைய ஜோதியையே மங்க வைப்பவன் அவன்! பூமியிலிருந்து என்னையே மறைக்க வல்லவனே!” என்றான். இப்படிக் கூறிய பிறகு சூரிய தேவன் விடைபெற்றுக் கொண்டான். பிறகு மேகம் வந்தான்.
இப்போது யாசகன் மேகத்திடம் முதலில் கேட்காமல், “என்னம்மா, இவனையாவது பிடித்திருக்கிறதா?” என்று பெண்ணை முதலில் கேட்டான். குஞ்சலியும் அவனை ஒரு கணம் பார்தது, “போப்பா! இவன் நல்லவன்தான். ஆனால் கொஞ்சம் கறுப்பு இல்லையா! இவனை விடச் சிறந்தவனாய், பெரியவனாய் யாருமே இல்லையா?” என்றாள்.
யாசகன் கேள்விக் குறியுடன் மேகத்தைப் பார்த்தான். “காற்றைப் பாருங்களேன்! வானில் என்னை இங்கும் அங்கும் தள்ளும் வாயு, என்னைவிட வல்லவன்தான், நல்லவன்தான்” என்று மேகம் மொழிந்தான். மேகம் போனான், காற்று வந்தான். குஞ்சலி அவனைப் பார்த்துவிட்டு,
“சஞ்சல புத்தியுள்ளவன் போல் தோன்றுகிறதப்பா இவனைவிடச் சிறந்தவன். பெரியவன், இருக்க மாட்டானா?” என்றாள். யாசகன் ஒன்றும் புரியாமல் இங்குமங்கும் பார்த்தான்.
உடனே காற்று ஒரு கூற்றுச் சொன்னான். “கவலைப்படாதே. மலையப்பன் கட்டாயம் என்னைவிடச் சிறந்தவன், பெரியவன். என் ஆற்றலையெல்லாம் உபயோகித்தாலும் அவனிடம் பலிக்காது. அசைய மாட்டான். அதனால் தானே அவனுக்கு அசலம் என்றுகூட ஒரு பெயர் உண்டு!”
காற்றான் மறைந்திட, மலையான் தோன்றினான். அவனைப் பார்த்தும் குஞ்சலி மலைக்கவில்லை. “கல்லுப் பிள்ளையார் மாதிரி இருக்கிறானே, துடிதுடிப்பே காணோமே! இவனை விடச் சிறந்சரயு ஆற்றங்கரையில் ஒரு யாசகனும் அவன் மனைவியும் வசித்து வந்தார்கள். சிறிய குடிசை ஒன்றில் வசித்துக்கொண்டு, எளிமையான துணிகளை உடுத்துக்கொண்டு, பக்கத்துக் கிராமங்களில் மக்கள் கொடுப்பதை உண்டு, அவர்கள்தவன், பெரியவன், கிடைக்கவே மாட்டானா?” என்று ஏங்கினாள்.
உடனே மலையவன் மொழிந்தான், “ஏன் இல்லாமல்! சுண்டெலி எங்கே போயிற்று! எனக்கு உள்ளேயே துளை போடும் துணிச்சல் உள்ள ஒரே பிராணி, சிறந்ததையே வேண்டும் இந்தச் சிங்காரிக்கு அதுவே சரியான துணைவன்!” மாமலை மறைய, சுண்டெலி தோன்றியது.
சுண்டெலியைக் கண்ட மாத்திரத்தில் குஞ்சலி, “அப்பா, அம்மா! இவனே என் மனதுக்கினிய மனாளன்! மாப்பிள்ளைகளில் எல்லாம் மிகச் சிறந்த மிகப் பெரிய இந்த மாவீரன் பக்கத்தில் இருக்க, ஏன் கதிரவனையும் காற்றையும் தேடிக் கொண்டிருந்தாய்? கணமேனும் தாமதியாமல் இந்த நிறைகுணவானை எனக்கு மணம் முடித்திடு” என்று ஆனந்தக் கூத்தாடினாள்.
சுண்டெலிக்கும் குஞ்சலிக்கும் கல்யாணம் நடந்தது. குஞ்சலி தன் வளர்ப்புப் பெற்றோர்களை விட்டு கணவனுடன் சென்றாள். யாசகனின் மனைவி, “ஹும், உலகத்திலேயே சிறந்த மாப்பிள்ளையைத் தான் தம் பெண்ணுக்குத் தேடினோம் அவளோ, தன் இஷ்டத்துக்கு எவனையோ பிடித்துக் கொண்டாள்” என்று பெருமூச்சு விட்டாள்.