மயிலாடி என்ற ஊரில் தினசரி சந்தை ஒன்றிருந்தது. சந்தையில் எல்லாப் பொருட்களுமே மக்களுக்கு தரமான விலையில் கிடைத்ததால், மக்கள் கூட்டம் தினமும் சந்தையில் அலை மோதியது.
அந்தச் சந்தையில் சோலையப்பன் என்பவன் காய்கறிக் கடை வைத்திருந்தான். சோலையப்பன் கடையில் தினமும் நல்ல விதமாக வியாபாரம் நடைபெறத் தொடங்கியது.
ஒருசில நாட்களில் மயிலாடி ஊரைச் சுற்றிலும் கடும் மழை பெய்யத் தொடங்கியது. கடும் மழை தொடர் மழையானது. ஒருவாரம் தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கியது.
இந்தத் தொடர் மழையால் சந்தையில் நடத்தி வந்த சோலையப்பனின் காய்கறி வியாபாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. சோலையப்பன் மிகவும் கஷ்டப்படலானான்.
அவனுக்கு தினமும் காய்கறி கொடுத்து வந்தவர்கள் சோலையப்பன் ஒரு வாரமாக பணம் கொடுக்காத காரணத்தால் காய்கறி கொடுப்பதை நிறுத்தி விட்டார்கள்.
சோலையப்பன் “மழையினால்தானே தொழில் பாதிப்படைந்தது. மற்றபடி நான் உங்களுக்கு பணம் தவறாமல் கட்டி வந்திருக்கின்றேனே ! வழக்கம் போல் எனக்கு காய்கறிகள் கடனாக கொடுங்கள்” என்று எவ்வளவோ கெஞ்சிக் கேட்டான்.
சோலையப்பனின் அழுகுரலை மொத்த காய்கறி வியாபாரிகள் நிராகரித்துவிட்டனர். சோலையப்பன் கவலையில் ஆழ்ந்தான். இனிமேல் இவர்களை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை.
நாம் யாரிடமாவது பணம் கடனாக வாங்கிதான் வியாபாரம் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். உடனே தன் நண்பன் ஆறுமுகத்தின் உதவியை நாடி, அவனிடம் சிறிது பணம் கடனாகக் கேட்டான்.
ஆறுமுகம் சோலையப்பனை நன்கு உபசரித்து அனுப்பினான். பணம் மட்டும் கொடுக்காமல் கையை விரித்துவிட்டான். ஆறுமுகத்திற்கு சோலையப்பன் ஒரு காலத்தில் எவ்வளவோ உதவிகள் செய்திருக்கின்றான்.
ஆனால் இப்போது தனக்கு உதவி செய்யாத ஆறுமுகத்தை நினைத்து மனம் வெம்பினான் சோலையப்பன். இரவு நேரம் ஆறுமுகம் தன் வீட்டில் குறட்டை விட்டபடி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான்.
அப்போது நான்கைந்து திருடர்கள் ஆறுமுகத்தின் வீட்டின் உள்ளே நுழைந்தார்கள். ஆறுமுகத்தை அடித்து உதைத்து அவன் வீட்டில் இருந்த பணத்தை எல்லாம் திருடிச் சென்று விட்டார்கள்.
சோலையப்பனுக்கு உதவி செய்யாத ஆறுமுகத்தின் பணம் அநியாயமாக திருடர்களின், வசம் சென்றுவிட்டது. இயன்றவரையிலும் பிறருக்கு, மறைக்காமல் பொருள் உதவி செய்ய வேண்டும்.