அராபிய அரசன் ஒருவன் தனது ஆட்களுடன் கப்பலில் பிரயாணம் செய்துகொண்டிருந்தான். அதில் ஒரு சிப்பாய் முதன்முறையாக கடலில் பயணம் செய்கின்றவன். ஆகவே அவன் கடலில் பயணம் கிளம்பிய நேரத்தில் இருந்து ” அய்யோ நாம் கடலில் முழ்கிப்போய்விடப் போகிறோம், கடல் பேய் நம்மை பிடித்துக் கொள்ளப்போகிறது நாம் கடலில் மூழ்கி செத்துப்போய்விட போகிறோம் ” என்று கத்திக் கொண்டேயிருந்தான்.
இவன் ஒருவனால் கப்பலில் இருந்த மற்றவர்களும் பயப்பட ஆரம்பித்தார்கள்.தம்பி கப்பல் பாதுகாப்பானது. அப்படி எதுவும் நடக்காது நீ தேவையில்லாமல் பயப்படாதே கடல்பேய் என்று ஒன்றுமேயில்லை என்று மாலுமி சொன்ன போதும் அவன் கத்துவதை நிறுத்தவேயில்லை. பகலில் இரவில் என எப்போதும் கடல்பேய் நம்மை பிடிக்கப் போகிறது என்று புலம்பிக் கொண்டேயிருந்தான், இது பெரிய தொந்தரவாக மாறியது.
இவனை எப்படி சமாதானம் செய்வது என்று ஒருவருக்கும் தெரியவில்லை. முடிவில் மன்னருக்கு தகவல் தெரிவிக்க்பட்டது. இவ்வளவு தானா அவன் பயத்தை நான் போக்கிவிடுகிறேன் என்று மன்னர் அந்த சிப்பாய் இருந்த இடத்திற்கு வந்து ” தம்பி கப்பல் உறுதியானது. அது எளிதில் உடைந்து போகாது என்றார் ‘ ஒருவேளை உடைந்து போனால் நாம் செத்துப் போய்விடுவோமே, கடல்பேய் நம் கப்பலை கவிழ்த்திவிடுமே என்றான், அப்படி நடக்காது என்றார் மன்னர். இயற்கையை மனிதர்களால் வெல்லவே முடியாது என்று அவன் புலம்பிக் கொண்டேயிருந்தான்.
அதைக்கண்ட மன்னர் மிக விளக்கமாகப் பேசிய போதும் அவன் அமைதியாகவில்லை. இவன் ஒருவனால் மொத்த கப்பல் பயணமே கெட்டு விடும் என்பது போன்ற நெருக்கடி சூழ்நிலை உருவாகி என்ன செய்வதென எவருக்கும் தெரியாமல் இருந்தது. அப்போது கப்பலில் இருந்த ஞானி ஒருவர், ‘ நீங்கள் விரும்பினால் நான் அவனை அமைதிப்படுத்துகிறேன், என அரசரிடம் சொன்னார். அதற்கு அரசர், என்னால் முடியாதது உங்களால் எப்படி முடியும் என்று கேட்டார். ” இப்போது பாருங்கள் ” என்ற ஞானி அந்த சிப்பாயைத் தூக்கி கடலில் வீசிடுமாறு கட்டளையிட்டார்.
மறு நிமிசம் வீரர்கள் அவனை போட்டார்கள் தூக்கி கடலில் அந்த சிப்பாய் நீந்தத் தெரியாமல் திக்கு முக்காடி கடல் நீரை சிறிது குடித்த பின்பு அவனது தலை முடியைப் பற்றி கப்பலை நோக்கி இழுத்தனர்.
அவன் கப்பலுக்கு கொண்டுவரப்பட்டவுடன், பயத்தோடு ஒரு மூலையில் அமைதியாக உட்கார்ந்து கொண்டான். சப்தமிடவேயில்லை, கடல் பேய் என்று வாயை திறக்கவேயில்லை. அரசன் ஆச்சர்யமுற்று, இது எப்படி சாத்தியமானது என்று கேட்டார். அதற்கு அந்த ஞானி, இந்த சிப்பாய்க்கு நீரில் மூழ்கிப் போவது என்றால் என்னவென்று தெரியவில்லை. ஆகவே கப்பல் தரும் பாதுகாப்பை அவன் உணரவில்லை. ஆபத்தை அனுபவித்தவனே, பாதுகாப்பு என்பதை நன்றாக அறிவான்.
நாம் வரப்போவதை பற்றி நினைத்து பயப்படுவதால் ஒன்றுமே ஆகப்போவதில்லை. எதையும் தைரியமாக எதிர் கொண்டால் ஆபத்திலும் கூட நாம் வெற்றி பெற முடியும் என்றார். ஆகவே பயணத்திற்கு எப்போதும் எதற்காகவும் பயப்படவே கூடாது பயணம் நமக்கு நிறைய பாடங்களை கற்றுத்தரும் நல்ல ஆசான்.. ( அராபிய கதையின் எளிய வடிவம் ).