காட்டிலிருந்து பிடிபட்டு கொண்டுவரப்பட்ட புலி ஒன்று சர்க்கஸ் கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருந்தது. கூண்டில் அடைக்கப்பட்ட மற்ற மிருகங்களைப்போல இல்லாமல் பகலும் இரவும் அந்தப்புலி நடந்து கொண்டேயிருந்தது. ஏன் அப்படி கூண்டிற்குள் அலைகிறது என்று எவருக்கும் தெரியவில்லை.
ஒரு நாள் எங்கிருந்தோ ஊர்ந்து வந்த நத்தையொன்று புலிக்கூண்டின் மீது உட்கார்ந்தபடியே அதை பார்த்துக் கொண்டிருந்தது. புலி ஒய்வில்லாமல் வட்டமாக சுற்றிக் கொண்டிருப்பதைக் கண்டு எதற்காக இப்படி சுற்றிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டது. அதற்கு புலி பதில் சொல்லவில்லை.
உடனே நத்தை ‘ கூண்டிற்குள் அடைபட்டுக் கிடக்க பயமாக இருக்கிறதா என்று கேட்டது. அதற்கு புலி நான் சுற்றிக் கொண்டிருக்கவில்லை. எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றது. நத்தைக்கு அது புரியவில்லை.
எப்படி என்று கேட்டது. கூண்டிற்குள் அடைபட்ட பிறகு வாழ்க்கையில் எதுவும் மிச்சமிருப்பதில்லை. பூஜ்யமாகி விடுகிறோம். இப்போது நான் மாட்டிக் கொண்டிருக்கிறேன், அதனால் என் வாழ்க்கை வெறும் பூஜ்யம் அதை நான் மறந்துவிடாமல் இருக்கவே சுற்றி சுற்றி நடந்து கொண்டேயிருக்கிறேன், எனது நடை பூஜ்யத்தை எழுதுவது தான்.
இப்படி நினைவு கொள்ளாவிட்டால் இந்தக் கூண்டு பழகிப்போகும். அவர்கள் போடும் உணவு பழகிப் போகும், என்னை வேடிக்கை பார்ப்பவர்கள் முகம் பழகிப்போகும். பிறகு நான் கூண்டுப்புலியாக சுகமாக வாழப் பழகிவிடுவேன். அது அவமானம். அப்படி வாழக்கூடாது. அது ஒரு இழிவு. ஆகவே நினைவில் உள்ள காட்டை ஒருபோதும் நான் மறக்க கூடாது.
இப்போது முடக்கப்பட்டு நான் அடையாளமற்றுப் போயிருக்கிறேன் என்ற உண்மை மனதில் இருந்து கொண்டேயிருந்தால் மட்டுமே விடுதலையைப் பற்றிய நினைவு வளர்ந்து கொண்டேயிருக்கும்.
அதற்காகவே பகலும் இரவும் வட்டமாகச் சுற்றி வந்தபடியே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றபடி புலி நடக்கத் துவங்கியது.
அதைக்கேட்ட நத்தை சிரித்தபடியே சொன்னது. நல்லவேளை நத்தைகளை எவரும் பிடித்துக் கூண்டில் அடைப்பதில்லை. உடனே ஆத்திரமான புலி சொன்னது, நானாவது பிடிபட்டு ஒடுங்கிக்கிடக்கிறேன். நீ பிறப்பிலிருந்தே வீட்டிற்குள் அடைபட்டுக் கிடக்கிறாய். கூண்டில் அடைக்கப்படுவது தற்காலிகம்.
முதுகிலே வீட்டைத் தூக்கி கொண்டு அலைவது அற்பமானது. உன்னைப் போன்ற நத்தைகள் வெறும் கோழைகள், நான் அடைபட்டுக் கிடந்த போதும் என் குரல் அடைக்கப்படவில்லை. கேள் என் ரௌத்திரத்தை என்றபடியே புலி உறுமியது.
அந்த குரலின் ஆழத்தில் புலியின் மனதில் இருந்த காடும் அதன் நினைவுகளும் எழுந்து அடங்கியது..
இந்தப் புலியை போன்றே நாமும் நம்முடைய வாழ்க்கை இலட்சியத்தை தினம் தினம் நம் மனதில் நினைத்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக ஒரு நாள் நம்மால் வெற்றி பெற முடியும்.