32. இழப்பதினால் வரும் இலாபங்கள்! | தமிழ் கதைகள் | Gains from losing! | Tenali Raman story

32. இழப்பதினால் வரும் இலாபங்கள்! | தமிழ் கதைகள் | Gains from losing! | Tenali Raman story

ஒரு நாள் இராயரும் தெனாலிராமனும் குதிரைச்சவாரி சென்றனர். அரசர் ஆயிரம் வராகன் மதிப்புள்ள தம்முடைய உன்னதமான அராபியக் குதிரையின் மீது வந்தார். 

தெனாலிராமனோ தன்னுடைய தொத்தலும் வத்தலுமாகவுள்ள குதிரையின் மீது வந்தான். அதைப் பார்த்து இராயர், “ராமா! உன்னுடைய பிரயோஜனமற்ற குதிரையை என் குதிரைக்குச் சமமாக ஓட்டிவர நினைத்தாயா?” என்று ஏளனம் செய்தார். 

அதற்கு ராமன், “அரசே! தாங்கள் நூறு பொன் பந்தயம் கட்டினால் தங்களுடைய குதிரையைக் கொண்டு தங்களால் செய்து காட்ட முடியாத காரியத்தை என்னுடைய குதிரையைக் கொண்டு நான் செய்து காட்டுவேன்!” என்று கூறி அரசரைப் பந்தயம் கட்டும்படிச் செய்தான். 

பின் ஓர் ஆற்றுப் பாலத்தின் மீது செல்லும் போது தன் குதிரையை விட்டிறங்கி, அதை ஆற்று வெள்ளத்தில் தள்ளிவிட்டு, “அரசே! இது போல் குதிரையைத் தங்கள் தள்ளிக் காட்டுங்கள் பார்க்கலாம்!” என்றான்.

Krishna Thevarayar tenali Raman story
Krishna Thevarayar

ஆயிரம் பொன் நாணயங்கள் விலை மதிப்புள்ள குதிரையை இழப்பதைவிட பந்தயப்படி நூறு பொன்னை ராமனுக்குக் கொடுப்பதே மேலென்று நினைத்த இராயர், “ராமா! என்னதானிருந்தாலும் பந்தயத்தில் வெல்வதற்காகப் பாவம் உன் குதிரையை இழந்துவிட்டாயே!” என்றார். 

ஆனால் தெனாலிராமன் “அரசே! ஐம்பது பொன்கூட விலை மதிப்புப் பெறாத அந்தப் பிரயோஜனமற்ற குதிரை இப்போது அதி பிரயோஜனம் உள்ளதாகிவிட்டது! 

அதைச் சந்தைக்கு இழுத்துச் சென்று விற்கும் சிரமமின்றி எனக்கு இருமடங்கு பொற்காசுகள் கிடைத்துவிட்டன! அதைப் பராமரிக்கும் வீண் செலவும் எனக்கு மிச்சமாயிற்று! அது இறந்ததினால் அதனுடைய உயிர் வேதனையும் தீர்ந்து அதற்கும் இலாபமாயிற்று. 

பிரயோஜனமற்ற நண்பனை இழப்பதால் துக்கம் ஏற்படாது என்பது பெரிய இலாபமாகும்! இவற்றையெல்லாம் நோக்கும் போது தாங்கள் இழக்க விரும்பாத தங்கள் குதிரையைவிட நான் சுலபமாக இழந்துவிட்ட என் குதிரையால் உண்டான இலாபமும் பிரயோஜனமும் அதிகமாகும்!” என்றான்.



Leave a Comment