9. புரோகிதர்களுக்குச் சூடு | தெனாலி ராமன் கதைகள் | Warm up to the priests tenali Raman story

புரோகிதர்களுக்குச் சூடு | தெனாலி ராமன் கதைகள் | Warm up to the priests tenali Raman story

கிருஷ்ணதேவராயர் தம் தாயின் திவசம் வந்த போது புரோகிதர்களிடம், “என் தாயார் மரண காலத்தில் சாவதற்கு முன்னால் மாம்பழம் சாப்பிட வேண்டுமென ஆசைப்பட்டாள்! ஆனால் மாம்பழம் வருவதற்குள் என் தாயார் மடிந்து விட்டாள்! என் தாயாரின் ஆத்மா திருப்தி அடைய என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்.

அதற்குப் பேராசை பிடித்த அப்புரோகிதர்கள் “அரசே! தங்கள் தாயாருக்கு நடைபெறும் இந்தத் திவசகாலத்தில் நூற்றி எட்டு மாங்கனிகளைப் பொன்னால் செய்து ஒவ்வொன்றையும் வெள்ளித்தட்டில் வைத்து நூற்றியெட்டு அந்தணர்களுக்குத் தானமாகக் கொடுத்தால் தங்கள் தாயாரின் ஆத்மா சாந்தியடையும்!” என்று கூறினர். 

இராயரும் அவ்வாறே செய்தார். அதைக் கண்ட தெனாலிராமன் புரோகிதரின் பேராசைக்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டுமென்று மனதிற்குள் கறுவிக்கொண்டு மறு நாள் தன் தாயாருக்குத் திவசமென்று கூறி, அதை நடத்தி வைக்க அப்புரோகிதர்களை அழைத்து வந்து அவர்களைத் தன் வீட்டிற்குள் அடைத்து வைத்து அடுப்பில் கரண்டியைப் பழுக்கக் காய்ச்சி ஒவ்வொரு புரோகிதருக்கும் நன்றாகக் கையில் சூடுபோட்டு அனுப்பினான். 

Krishna Thevarayar
Krishna Thevarayar

அலறித்துடித்த அந்தணர்கள் அரசரிடம் சென்று முறையிட்டபோது தெனாலிராமன் அங்கு வந்து, “அரசே! என் தாய் மரணத் தருவாயில் இருக்கும் போது அவளுக்குத்  திடீரென்று வலிப்பும், இழுப்பும் வந்தது.

உடனே என் தாய் அடுப்பில் கரண்டியைப் பழுக்கக் காய்ச்சி வந்து தன் கையில் சூடு போடும்படி என்னிடம் கூறினாள். ஆனால் நான் சூட்டுக்கோலுடன் வருவதற்குள் அவள் ஆவி பிரிந்துவிட்டது.

என் தாய் அவ்வாறு ஆத்ம சாந்தியடையாமல் இறந்ததைப்பற்றி நீண்ட நாட்களாக மிகவும் வருந்தினேன். தங்களுடைய தாயாரின் ஆத்மா திருப்தியடைய நூற்றியெட்டு தங்க மாங்கனிகளைத் தானம் செய்தீர்கள். 

அவ்வாறே நானும் என் தாயாரின் ஆத்மா சாந்தியடைவதற்காக இந்த அந்தணர்களுக்குச் சூடு போட்டேன். 

இதில் என்ன தவறிருக்கிறது அரசே!” என்று கூறிச் சிரித்தான்.

சபையும் கொல்லென்று சிரித்து “பேராசைக்காரர்களான புரோகிதர்களுக்கு இது நல்ல சூடுதான்!” என்று நினைத்தது.



Leave a Comment