7. மூளைக் கொதிப்பும் முதன்மையும் | தெனாலி ராமன் கதைகள் | Brain fever and primacy | tenali Raman stories

7. மூளைக் கொதிப்பும் முதன்மையும் | தெனாலி ராமன் கதைகள் | Brain fever and primacy | tenali Raman stories

இராயர் தசரா விழா நடத்திய போது அரசவைக்கு இளவரசி மோகனாங்கியின் பிரத்தியேக அழைப்பிற்கிணங்கி தஞ்சாவூரிலிருந்து ஒரு பெரிய பண்டிதர் வந்திருந்தார்.

அவர் தத்துவ ஞானத்திலும், மத சம்பந்தமான விஷயங்களிலும் வல்லவரென்பதை அறிந்த இராஜகுரு தம்மை அவர் வெகு எளிதில் வாதப்போரில் வென்றுவிடுவாரென்று பயந்து அரசவைக்கு வராமல், தம்முடைய அந்தரங்கத் தோழரான அரங்காச்சாரியாரை மட்டும் அனுப்பி, “நம் இராஜகுரு அதிகமாகச் சிந்திப்பதினால் ஏற்படும் மூளைக் கொதிப்பால் அவஸ்தைப் படுவதால் வரவில்லை” என்று பொய்ச் சொல்லும்படிச் செய்தார். 

உடனே தெனாலி ராமன் துள்ளி எழுந்து “ஆகா! நம் இராஜகுருவின் மூளை அதிகமாகச் சிந்திப்பதினால் மூளைக் கொதிப்பு ஏற்பட்டிருக்கிறது! என் கண்கள் அதிகமாகப் படித்ததினால் கண் கொதிப்பு ஏற்பட்டிருப்பதைப் போல!” என்றான். 

அரசரோ “இதென்ன அதிசயமாயிருக்கிறது? தெனாலி ராமனை விட அதிகம் படித்துள்ள தாத்தாச்சாரியாருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதேயில்லை!” என்றார்.

Tenali Raman

ஆனால் மிகவும் தீர்க்கமாக ஆலோசனை செய்த சங்கரர். “இராமானுஜர், மதவாச்சாரியார் முதலியவர்களுக்கு ஏற்படாத மூளைக் கொதிப்பு நம் ராஜகுருவுக்கு ஏற்பட்டிருக்கிறது!” என்றார். 

அதற்கு தெனாலிராமன் “அரசே! இதில் என்ன ஆச்சரியமிருக்கிறது? மனிதர்களுக்கு அதிகமாய்ப் படிப்பதாலோ சிந்திப்பதாலோ மூளைக்கொதிப்பு போன்ற வியாதிகள் ஏற்படுவதில்லை! தங்களைப் பற்றித் தாங்களே அதிகமாய் சிந்திப்பதால் தான் மூளைக்கொதிப்பு போன்ற வியாதிகள் ஏற்படுகின்றன!” என்றான்.

சபை கொல்லென்று சிரித்தது. அரங்காச்சாரி ஆத்திரத்துடன் “இராமா! உன்னை விட இராஜகுரு முதன்மையானவர்! அவருக்குத்தான் முதல் மரியாதைகள் தரப்படுகின்றன. அவர்தான் முதலாவதாகக் கவனிக்கப்படுகிறார்!” என்றார்.

அதற்கு ராமன், “நாம் முகம் கழுவுவதற்கு முன்னால் முதலில் கை கால்களைத் தான் கழுவிச் சுத்தம் செய்கிறோம். அதனால் அவைகள் முகத்தை விடச் சிறந்ததென்று சொல்ல முடியுமா?” என்று கேட்டான்.

சபை மறுபடியும் கொல்லென்று சிரித்தது. அரங்காச்சாரியாரோ தம் இராஜகுருவின் சார்பாக அவமானத்தினால் தலைகுனிந்தார்.



Leave a Comment