ஐயம் இட்டு உண் | ஆத்திசூடி கதைகள் | Before eating, share food with those who need | tamil kathaigal

ஐயம் இட்டு உண் | ஆத்திசூடி கதைகள் | Before eating, share food with those who need | tamil kathaigal

ஆலையூரில் ஆனந்தன், அழகப்பன் என்று இரண்டு நண்பர்கள் வாழ்ந்து வந்தார்கள். ஆனந்தன் கோடீஸ்வரர். அழகப்பன் சுமாரான நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்.

ஆனந்தனும், அழகப்பனும் வாரத்திற்கு இருமுறை ஆலையூரில் இருக்கின்ற கோயில் மண்டபத்தில் சந்தித்துக் கொள்வார்கள். ஆனந்தன் அழகப்பனைச் சந்திக்கின்ற நேரமெல்லாம், உற்சாகத்துடனும் சந்தோஷமாகவும் இருப்பது ஆனந்தனுக்கு வியப்பை அளித்தது.

அழகப்பனுக்கு பெரிய வசதி ஒன்றும் இல்லை. உடைந்த ஓட்டு வீட்டில் குடித்தனம் நடத்திக் கொண்டு, ஏதோ சொற்ப வருமானத்தில் ஒரு தொழிற்சாலையில் வேலைபார்த்து கஷ்டத்தோடு வாழ்ந்து வரும்போது, மனதில் எந்தவித கவலையும் இல்லாமல் அவரால் எப்படி வாழ முடிகிறது என்ற கேள்விக்குறி ரொம்ப நாளாக ஆனந்தனின் மனதுள் இருந்து வந்தது.

temple tamil kathaigal 2
temple tamil kathaigal 2

ஒருநாள் ஆனந்தன் அழகப்பனை வழக்கமாக கோயிலில் சந்தித்தார். “நண்பரே! ரொம்ப நாட்களாக என் மனதுள் எழுந்த கேள்விக்கு இன்று உம்மிடம் விடைகேட்டு வந்துள்ளேன். நீர் தான் எனது சந்தேகத்தைத் தீர்த்துவைக்க வேண்டும்” என்று கூறினார்.

அதனைக்கேட்ட அழகப்பனும் “நண்பரே! நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எனக்கு வேடிக்கையாக இருக்கின்றதே! அப்படி என்ன பெரிய சந்தேகத்தை என்னிடம் கேட்கப் போகிறீர்?” என்று வியப்போடு கேட்டார்.

உடனே ஆனந்தன் “நண்பரே! நான் உம்மைவிடவும், பணத்திலும், செல்வாக்கிலும் எவ்வளவோ வசதிபடைத்தவன். அப்படியிருக்கையில் என்னை விடவும் நீர் எந்த நேரமும் சந்தோஷமாக இருக்கின்றீரே!

உம்மைப் போன்று என்னால் சந்தோஷமாக இருக்க முடியவில்லையே! நான் தினமும் கவலையால் வாடி மன நிம்மதியில்லாமல் வாழ்கின்றேனே” என்று கூறினார்.

ஆனந்தன் கூறியதைப் பொறுமையாகக் கேட்ட அழகப்பன், “நண்பரே! இந்தக் கோயில் ஓரத்தில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்” என்றார். உடனே ஆனந்தனும் கோயில் மண்டபத்தின் பக்கம் திரும்பிப் பார்த்தார்.

annadanam tamil kathaigal 3
annadanam tamil kathaigal 3

அங்கே சமபந்தி விருந்தில் அமர்ந்தபடி எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். உடனே அழகப்பன் “நண்பரே! இப்போது புரிந்து கொண்டீர்களா! என்னால் முடிந்த வரைக்கும் வறுமையில் வாடுபவர்களுக்கும், வசதியில்லாதவர்களுக்கும் அன்னதானம் செய்வதோடு இல்லாமல் மேலும் , பல உதவிகளை செய்து வருகின்றேன்.

அதனால் என் மனம் முழுத் திருப்தியோடும் எப்போதுமே சந்தோஷமாகவும் இருக்கின்றது” என்று கூறினார்.

அழகப்பனிடம் விடைப் பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்த ஆனந்தன், வெகு நேரமாக யோசனையில் ஆழ்ந்தார். வசதியில்லாத அழகப்பனே ஏழைகளுக்கெல்லாம் தர்மம் செய்கின்றபோது, வசதி படைத்த நான் ஏழைகளுக்கு எவ்வளவோ தர்மம் செய்யலாமே.

நான் தர்மம் செய்வதால் எனக்குப் புண்ணியம் சேருவதோடு, என் மனமும் சந்தோஷமடையுமே என்று மனதில் நினைத்துக் கொண்ட ஆனந்தன் மறுநாள் முதல் ஏழை மக்களுக்கு தர்மம் செய்ய வேண்டி ஓர் அறக்கட்டளையை நிறுவினார்.

அதன் மூலம் படிக்க வசதியில்லாத ஏழைக் குழந்தைகளுக்கு பல உதவிகள் செய்தார். தொழில் செய்யமுடியாமல் வறுமையில் வாடுகின்ற ஏழைக் குடும்பங்களுக்கு பொருளுதவி செய்தார்.

மேலும் அவர்கள் தொழில் தொடங்கவும், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அவர்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவும் உதவி செய்தார்.

ஆனந்தன் நடத்திவரும் அறக்கட்டளை நிறுவனத்தை எல்லோரும் பாராட்டினார்கள். அவர் புகழ் எல்லா இடங்களிலும் பரவியது. ஆனந்தன் தன் மனதில் மகிழ்ச்சி வெள்ளம் குடி கொண்டிருப்பதை மெல்ல, மெல்ல உணர ஆரம்பித்தார்.

நீதி:
ஏழை , எளிய மக்களுக்கு தர்மம் செய்து பகிர்ந்துண்டு வாழவேண்டும்.

Leave a Comment