பாய்ஸ் | boys | tamil kathaigal

பாய்ஸ் | boys | tamil kathaigal

சங்கீதாவும், ஈசுவரியும் ஏழாம் வகுப்பு பி பிரிவு படிப்பவர்கள். இருவரும் ஒன்றாகச் சேர்ந்துதான் பள்ளிக்கூடம் போவார்கள், எதுவாக இருந்தாலும் இருவரும் பங்கிட்டுக் கொள்வார்கள்.


எப்போதும் பிரியாதவர்கள் இப்போது சிறுசண்டை வந்துவிட்டது. காரணம் சங்கீதா பாய்ஸ் பிளாக் வசந்திடம் மிட்டாய் வாங்கியது தான்.


ஈசுவரி கேட்டாள் “நீ ஏன் மிட்டாய் வாங்கினே அவன்கிட்டேர்ந்து.”


“அவனும் என் ப்ரெண்ட்ப்பா.”


“நான் தான் உன் பிரெண்ட் பாய்ஸ் எல்லாம் பிரெண்ட் கிடையாது. பாய்ஸ் பிளாக் பக்கம் போகக்கூடாது. பாய்ஸ் கூட பேசக்கூடாதுன்னு நம்ம மிஸ் சொல்லியிருக்காங்கல்ல…”


“ஆமாம்.”


“அப்புறம் ஏன் போய் பேசுனே”


“ஈசு தான் பாய்ஸ் பிளாக் பக்கம் போகலே அவன் வீட்டுலேர்ந்து வரும்போது பாத்து மிட்டாய் கொடுத்து ப்ரெண்ட்ன்னு சொன்னான்.”


“மிட்டாய் கொடுத்தா ப்ரெண்டா?”


“அப்படித்தான் அவன் சொன்னான்.”

“முடியாது, நான் மிஸ் கிட்டே சொல்லி உன்னை மாட்டிவிடப் போறேன்.”


சங்கீதா கெஞ்சினாள் “வேண்டாம் ஈசுவரி மிஸ் அடிச்சா வலிக்கும்பா..”


“அப்போ உங்க சித்திகிட்டே சொல்றேன்.”

“அய்யய்யோ” என்று உடல் நடுங்கி அழுதாள் ஈசுவரி பதறிப் போய்விட்டாள்.


“ஏய் ஏன் அழறே?”


“சித்தி சூடு வப்பாங்க. அப்பாவுக்கு தெரிஞ்சா செருப்பு காலால் உதைப்பாரு. எங்கம்மாவ உதைச்சு தான் செத்துப் போனாங்க..”

ஈசுவரிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.


“சரி சரி அழாதே சொல்லலே. அவன் எப்படி பிரெண்ட் உனக்கு?”


சங்கீதா கண்ணைத் துடைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.


“அவங்க எங்க வீட்டு எதிர்த்த வீட்டுல குடி இருந்தாங்க… ஒரு வாட்டி பால் வாங்கறப்ப நானும் கூட அவனும் சேர்ந்து பால் வாங்கிட்டு வந்தோம். அப்போ சித்தி பார்த்துகிட்டு ஆம்பள பசங்க சேந்து வர்றியான்னு திட்டி அடிச்சாங்க.

அவங்க அம்மா வந்து சித்திட்ட மன்னிப்பு கேட்டாங்க சித்தி அவங்களையும் திட்டிப்புட்டாங்க. அப்புறம் அவங்க வீடு மாத்திப் போயிட்டாங்க. இப்பத்தான் முந்தாநாள் அவனப் பார்த்தேன் மிட்டாய் கொடுத்து ப்ரெண்ட்ன்னான்.
அதான் வாங்கிட்டேன். இனிமே வாங்க மாட்டேன் பேசமாட்டேன் நீதான் என் பிரெண்ட்.”


ஈசுவரி அவள் மட்டும் தான் பிரண்ட்னு சொன்னதில் மகிழ்ச்சியானாள். மாலையில் பள்ளிக்கூடம் விட்டதும் ஈசுவரியும் சங்கிதாவும் பாட்டி கடைக்கு மிட்டாய் வாங்கப் போனார்கள்.

அங்கே வசந்த் நின்று கொண்டிருந்தான் சங்கீதா அவனைப் பார்த்ததும் திரும்பிக் கொண்டாள் ஈசுவரி அதைக் கவனித்தாள்..

tamil-kathaigal-friend
tamil-kathaigal-friend


இருவரும் துண்டு மாங்காயும் தேன் மிட்டாயும் வாங்கிக் கொண்டார்கள் அவனைப் பார்க்காமல் திரும்பி நடந்தார்கள்.


அவன் பின்னாலே வந்தான் இருவரும் திரும்பிப் பார்க்க அவன் சிரித்தான் பதிலுக்கு இவர்கள் சிரிக்கவில்லை. அவன் அருகே வந்தான். கையை இருவரையும் நோக்கி நீட்டினான் கையில் கொடுக்காப்புளி இருந்தது.

“எனக்கு யாரும் பிரெண்ட்ஸ் இல்லப்பா நல்லா படிக்கறவங்க ப்ரெண்டா இருக்கலாம்னு எங்கம்மா சொன்னாங்க.


நீங்க நல்லா படிக்கறவங்க தானே எனக்கு மாத்ஸ் சொல்லிக் கொடுங்கப்பா ப்ரெண்ட்ஸ் ஆயிடலாம். இந்தாங்க கொடுக்காப்புளி”


கை நீட்டியபடி இருந்தான் முகம் பார்க்கப் பாவமாக இருந்தது. ஈசுவரி சங்கீதா முகத்தைப் பார்த்தாள். சங்கீதா ஈசுவரி முகத்தைப் பார்த்தாள்.


ஈசுவரி சிரித்தபடி கொடுக்காப்புளியை வாங்கிக் கொண்டு “நீயும் வாங்கிக்கோ” என்றாள் சங்கீதாவும் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டாள்.


“நாம் பிரெண்ட்ஸ் ஆயிட்டோம்” என்றாள்.

ஈசுவரி கொடுக்காப்புளியை எடுத்து வாயில் போட்டபடி வசந்திடம் மாங்காய் துண்டை நீட்ட “எனக்குப் பிடிக்கும்” என்று வாங்கிக் கொண்டு சிரித்தான்.

Leave a Comment