சொர்க்கலோகத்திற்கு ராஜ பவனி | Raja Bhavani to Heaven | tamil story

சொர்க்கலோகத்திற்கு ராஜ பவனி | Raja Bhavani to Heaven | tamil story 

ஒரு குண்டு அரசன் இருந்தான். அவன் அறிவற்ற ஏமாளியாக இருந்தான். அவனுக்கு ஒல்லியாய், ஒரு விஷமக்கார மந்திரி இருந்தான். இவன் அரசனை எப்போதும் புகழ்ந்து பேசுவான். 

தான் பெரிய புத்திசாலி போலப் பாசாங்கு செய்வான். இந்த அறிவுக் கூர்மைமிக்க மந்திரி இருக்கப் பயமேன்!என கவலையற்று இருந்தான் மன்னன். “சத்தியம் பண்ணு, என் சற்குண மந்திரியே, என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்று” என அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பான்.

“சத்தியம், சத்தியம், முக்காலும் சத்தியம்! மன்னர் மன்னா, நீ இவ்வுலகில் இருந்தாலும், சொர்க்கம் சென்றாலும், அட, நரகத்துக்கே போனாலும் உன்னை விட்டுப் பிரியேன். உனக்கு நன் மதி கூறி உன் பிரச்சினைகளை எல்லாம் தீர்த்துக் கொண்டு, உன்னோடேயே இருந்திடுவேன்!” என்று மந்திரியும் மறுமொழி கூறுவான். மன்னனுக்கு உச்சி குளிர்ந்துவிடும். 

ஒரு நாள் மாலை, அரசன் ஆற்றங்கரை ஓரமாக உலவிவிட்டு அரண்மனைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். பக்கத்துக் காட்டில் நரிக்கூட்டம் ஒன்று ஊளையிட்டுக் கொண்டிருப்பதைக் கேட்டான். மாலை நேரம் வந்தால் நரியாருக்குக் கொண்டாட்டம், கூட்டம் கூடி ஊளையிடுவார் என்று யாருக்குத்தான் தெரியாது?

ஆனால் நம் ராஜாவுக்குத் தெரியாது. ஏன் இப்படிச் சத்தம் போடுகின்றன என்று எப்படியாவது தெரிந்து கொள்ளத் துடித்தான். “இத்தனை நரிகள் ஒரே சமயத்தில் ஊளையிடுவதேன்? அதுவும், என் ராஜ செவிகளில் அத்தனை சத்தமும் கட்டாயம் விழும் என்று அறிந்தும் எதற்காக இவை ஊளை இடுகின்றன” என்று மந்திரியைக் கேட்டான். 

“மன்னவா, இது குளிர்காலம் இல்லையா? பாவம், அந்த நரிகளுக்குக் கம்பளித் துணியே இல்லை. போர்வை கொடு என்று அவை உன்னை வேண்டுகின்றன!” என்றான் மந்திரி. 

“அப்படியா சேதி! மிக்க நன்றி. நரி மனம் அறிந்து சொல்வானே நல்ல மந்திரி. ஆனால், ஏன் இந்த நரிகளுக்குப் போர்வையே இல்லையாம்?” என்றான் அரசன்.

“எல்லாம் நம் உபகாரப் பணிகள் அதிகாரிதான் காரணம்” என்றுவிட்டான் மந்திரி.

அந்த அதிகாரி மேல் மந்திரிக்கு ஏதோ விரோதம். “என்ன அநியாயம்; இந்த உபகாரப்பணிகள் அதிகாரி, நம் அருமையான நரிகளுக்குப் போர்வை இல்லாமலா செய்து விட்டான். அந்த ஆளை ஒரு கம்பளியில் சுற்றிக் கடலில் போடு, அப்புறம், நூறு கம்பளி வாங்கி நம் நரிகளுக்கு எல்லாம் கொடு” என்று ஆணையிட்டான் அரசன். 

அதை ஆணையாகக் கொண்டு உடனே நிறைவேற்றுவதாய், சிட்டாய்ப் பறந்தான் மந்திரி. ஆனால் ஆணையில் முதல் பாதியைத்தான் நிறைவேற்றினான். அந்த அதிகாரிக்கு உலகத்திலிருந்து சீட்டுக் கொடுத்துவிட்டான். கம்பளி வாங்கக் கஜானாவிலிருந்து பணம் எடுத்துத் தன் பையில் போட்டுக் கொண்டான். 

மறுநாள் மாலையும் நரியின் ஊளை ராஜா செவிகளில் விழுந்தது. பெரிய வியப்போடு மந்திரியைப் பார்த்து, “என்ன விஷயம், திரும்பவும் நம் நரிகள் ஊளையிடுவானேன்?” என்று அரசன் கேட்டான். 

மந்திரி புன்சிரிப்புடன், “இப்போது முழுக்க முழுக்க வேறு காரணம், வேந்தே! இது நன்றிகூறும் நரியூளை!” என்றான்.

“மெச்சினேன். அற்புதம்!” என்றான் அரசன். “இது என் மூளைக்குப் பட்டே இருக்காது. உன் மாதிரி மந்திரியுள்ள ராஜா, இந்த பூலோகத்தில் இருக்க முடியாது. அமைச்சரே நீ என்னுடன் இருப்பதனால், இந்த உலகத்து அறிவெல்லாம் என் உள்ளங்கையினிலே! ஆனால் சத்தியம் பண்ணு மந்திரியே, செத்தாலும் என்னைவிட்டுப் போகமாட்டேன் என்று.”

“ஒருகாலும் மாட்டேன். சொர்க்கமோ, நரகமோ. நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் இருப்பேன்” என்றான் மந்திரி. வழக்கம் போல மகிழ்ந்தான் மன்னன். 

ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ஒரு நாள் எங்கிருந்தோ ஒரு காட்டுப்பன்றி எதிர்ப்பட்டது. இந்த ராஜா வேட்டையாடக் காட்டுக்குப் போனதே கிடையாது. வேட்டைக்கு என்ன, தன் சின்ன ஊரைவிட்டே போனது கிடையாது. அப்படி இருக்க காட்டுப் பன்றியை எங்கே பார்த்திருப்பான். அப்படியே பார்த்திருந்தாலும் அதெல்லாம் அவனுக்கு நினைவில்லை. 

forest-pig-big

எனவே ஆச்சரியத்துடன் மந்திரியைப் பார்த்து, “அட ஆண்டவனே! இது என்ன ஜீவன்” என்று கேட்டான். மந்திரிக்குத் தெரியும், அது என்ன ஜீவன் என்று. ஆனால் வழக்கம்போல அரசனின் அறியாமையைத் தனக்கு ஆதாயப்படுத்திக்கொள்ளத் தீர்மானித்தான்.

“இது உன்னுடைய யானைகளில் ஒன்று, மன்னா. நம் யானை அதிகாரி இதற்குச் சரியான தீனி போடாததால், பாவம், இப்படித் துரும்பாய் இளைத்திருக்கிறது!” என்றான். ராஜாவிற்குக் கோபத்தால் மீசை துடித்தது. “கொல் அந்த யானைக்காரனை!” என்று ஆணையிட்டான்.

பிறகு, கஜானாவிலிருந்து வேண்டிய மட்டும் பணத்தை எடுத்துக்கொண்டு யானையைத் திரும்பக் கொழுக்க வைக்கும்படி, மந்திரியை வேண்டிக்கொண்டான். நம் கஜப்புளுகர் கஜானாவிலிருந்து தனக்கு வேண்டிய மட்டும் பணம் எடுத்துக்கொண்டு தன்னிடமே வைத்துக் கொண்டார்.  

ஒருமாதம் ஆயிற்று, மறுபடியும் ஒருநாள் மாலை மன்னன் உலா போய்விட்டு வருகையில், அதே காட்டுப்பன்றி மீண்டும் தென்பட்டது. மந்திரியைப் பார்த்து, “நாம் அன்றைக்குப் பார்த்தோமே, பசியால் வாடிய யானை, அதேதானே, இது ? ஏன் உடம்பு இன்னும் பெருக்கவில்லை” என்று கேட்டான். 

முப்பத்திரண்டு பல்லும் தெரிய மந்திரி இளித்தான், “ஐயோ, இது அந்த யானை இல்லை மகாராஜா. அது உங்கள் திருமேனியைப் போலவே உருண்டு திரண்டு விட்டது. இது ஒரு சுண்டெலியாக்கும்! நம் அரண்மனை மடப்பள்ளியில் ஆகாரத்தையெல்லாம் தின்றுவிட்டு இப்படிக் கொழுத்துக்கிடக்கிறது. நம் தலைமை சமையற்காரர் இருக்கிறாரே, அவர் சமையல் அறையைக் கவனித்துக் கொள்கிற லட்சணம் இது!” என்றான் மந்திரி.

யானை போல் கொழுத்த அரசனின் முகம், பழுத்த மிளகாய் போலச் சிவந்தது. ராத்திரி ராஜவிருந்தைத் தயாரித்தவுடன், சமையற்காரனைத் தூக்கில் போடும்படி உத்தரவிட்டான் மன்னன். 

சமையற்காரன் மந்திரியிடம் ஓடோடி வந்து, நிறைய பணத்தை அவனிடம் ரகசியமாகத் திணித்தான். ராஜாவிற்கு ஏதாவது நல்ல பணியாரம் செய்தால், மந்திரிக்கும் ஒளித்து வைத்துக் கொடுப்பதாய் வாக்களித்தான். மந்திரிக்குச் சந்தோஷமாய்ப் போயிற்று. “பயப்படாதே, பணியாரக் கலைஞனே! உனக்கு ஒன்றும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று தைரியம் கூறினான். 

cook tamil kathaigal
cook

நடுச்சாமத்தில் அரசன் முன்னே சமையற்காரன் தூக்கில் ஏற்றப்படவிருந்த சமயத்தில், “நிறுத்துங்கள், நிறுத்துங்கள்,” என்று கத்திக்கொண்டே மந்திரி ஓடிவந்தான். பிறகு மன்னனுக்கு விளக்கத் தொடங்கினான். 

“அரசே, இப்போதுதான் பஞ்சாங்கத்தைப் பார்த்தேன். இந்த நள்ளிரவு வேளை மிக மிக நல்ல வேளை. ஆகையால் இப்போது தூக்கில் போடப்படுகிற எவனுக்கும் சொர்க்கத்திலே சாசுவதமாய் வாழ இடம் போட்டு வைத்திருப்பார்களாம். அரசே, சமையற்காரனை இப்போது தூக்கில் போட்டால் அது தண்டனையே ஆகாது. பெரிய பரிசு ஆகிவிடும். உன்னைப் பருக்க வைக்காமல் கேவலம் எலியைக் கொழுக்க வைத்த அயோக்கிய சமையற்காரனைப் போய் சொர்க்கத்துக்கா அனுப்புவது?” என்றான் மந்திரி. 

எப்படியாவது இப்போது தூக்கு தண்டனையைத் தாமதப் படுத்திவிட்டால், பிறகு அரசன் அதை மறந்தே போய் விடுவான் என்று மந்திரிக்கு நிச்சயம் தெரியும். மன்னனின் ஞாபகசக்தி அவ்வளவு அபாரம்!

ஆனால் அரசனோ ஆனந்தத்தால் குதித்தான். “நல்லது மந்திரியே! மிகவும் நல்லது. வெகு காலமாகவே எனக்குச் சொர்க்கத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆசை. யாரடா அங்கே தூக்குக்காரன்! சுருக்கை என் கழுத்தில் மாட்டி என்னைத் தூக்கேற்று, சீக்கிரம், சீக்கிரம்” என்றான். தூக்கு மேடையை நோக்கி ராஜநடை போட்டவன், திடீரென்று நின்றான் . 

“ஆனால் என் அருமை மந்திரியே, என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்று சத்தியம் செய்வாயே, அதைக் காப்பாற்ற தயை கூர்ந்து சொர்க்கத்திற்கு முதலில் சென்று எனக்கு வழிகாட்டு!” என்றான் மன்னன். சித்தம் கலங்கிய மந்திரி ஏதேதோ சொல்ல முயன்றான் ஒன்றும் ராஜாவின் செவியில் விழவில்லை.

hook
hook

அரசன் பாட்டுக்கு, தூக்குப் போடுகிறவனுக்கு மந்திரியை முதலில் அனுப்பி வைப்பதற்கு உத்திரவுகளை கொடுத்துக் கொண்டிருந்தான். தூக்குக்காரன் மந்திரியை இழுத்துவர, மற்றவர்கள் சேர்ந்து கொண்டு அவன் தலையைச் சுருக்குக்குள் தள்ளினார்கள். மந்திரியை தூக்கேற்றி அனுப்ப இத்தனைபேர் உதவுகிறார்களே என்று ராஜாவிற்கு ஒரே ஆனந்தம். மந்திரி தூக்கில் போடப்பட்ட பிறகு மன்னனையும் அவன் விரும்பியபடியே, தூக்கில்போட்டு மக்கள் மகிழ்ச்சியுற்றார்கள்.



Leave a Comment