ஈவது விலக்கேல் | ஆத்திசூடி கதைகள் | tamil story

மதினாபுரம் என்ற நாட்டை மகேந்திரகுமரன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். மன்னர் மகேந்திரகுமரன் அறிஞர்களையும், கவிஞர்களையும் ஆதரித்து வந்தார். 

தன்னைத்தேடி வருகின்ற கவிஞர்களுக்கு ஏராளமாக பரிசுகள் கொடுத்து கௌரவித்தார். மகேந்திரவர்மனின் அரசவையில் சித்ரவதனா என்ற அரசவைக் கவிஞர் புதியதாக நியமிக்கப்பட்டார். 

கவிஞர் சித்ரவதனாவுக்கு, மற்ற கவிஞர்கள் அரசவைக்கு வந்து மன்னரிடம் பரிசு வாங்குவது அறவே பிடிக்கவில்லை. மன்னர் கவிஞர்களுக்குப் பரிசு கொடுப்பதையே தடுத்துவிட வேண்டுமென முடிவு செய்தார். 

அரசவைக்கு மன்னரைத் தேடி நாட்டின் தலைசிறந்த கவிஞர்கள் எல்லாம் தாங்கள் இயற்றிய கவிதைகளோடு மன்னரைக் காண வந்தார்கள். அவர்களைக் கண்ட சித்ரவதனா, அந்தக் கவிதைகளில் குறைகள் இருப்பதாகக் கூறி அவர்களை பரிசு பெறாமல் செய்துவிடுவார். 

இதனால் மன்னரைக் காணவந்த கவிஞர்கள் எல்லாம் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். அவர்கள் குடும்பமெல்லாம் வறுமையில் வாடியது. 

அரசவைக் கவிஞர் சித்ரவதனாவின் செயலை அரண்மனை விகடகவி அறிந்து கொண்டார். எப்படியாவது சித்ரவதனாவை அரசவை கவிஞர் பதவியிலிருந்து இறக்கி மற்ற கவிஞர்கள் வாழ வழி செய்ய வேண்டு மென்று, முடிவெடுத்தார். 

தனது எண்ணம் நிறைவேற என்ன செய்வதென , நீண்ட நேர யோசனையில் ஆழ்ந்தார். மறுநாள் அரசவைக்கு வரும் நேரம் கவிஞர் வேடத்தில் வந்தார் விகடகவி. மன்னரை வணங்கிய அவர் “மன்னர் பெருமானே ! எமது தொழில் கவிதைகள் இயற்றுவது ! நான் உங்கள் அரசவைக் கவிஞரிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டி நெடுந்தூரத்திலிருந்து வந்துள்ளேன். என் கேள்விக்கு சரியான பதிலை உங்கள் அரசவை கவிஞர் கூற வேண்டும். 

இல்லை யென்றால் அவர் தன் பதவியையே ராஜினாமா செய்ய வேண்டும் என்றார். அதனைக் கேட்ட மன்னருக்கோ ஆத்திரம் வந்துவிட்டது. 

“கவிஞரே ! எனது அரசவை கவிஞரைப் பற்றி உமக்குத் தெரியாது ! அவரிடம் நீர் வம்பு செய்து வாங்கிக் கட்டிக் கொள்ளப் போகின்றீர்” என்று கோபத்துடன் கூறினார். 

அதனைக் கேட்ட கவிஞர் வேடத்திலிருந்த விகடகவி “மன்னரே கோபம் வேண்டாம். உங்கள் அரசவைக் கவிஞரின் அறிவுத் திறமையை இப்போது நேரில் எல்லோருமே பார்த்துவிடலாம். அவர் என் கேள்விக்கேற்ற பதிலை சரியாக சொல்லவில்லையென்றால் அவர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கின்றாரா ? என்று கேட்டுச் சொல்லுங்கள் ” என்று கூறினார்.

அதே நேரம் அரசவை கவிஞர் சித்ரவதனாவே தன் இருக்கையை விட்டு எழுந்து கொண்டார். ”கவிஞரே உமது கேள்வியைக் கேளும். நான் பதில் சொல்லவில்லையென்றால், உடனே ராஜினாமா செய்கிறேன். அதே இடத்தில் உம்மை மன்னரிடம் சிபாரிசு செய்து அரசவை கவிஞராக நியமிக்கிறேன். ஆனால் நான் பதில் சொல்லிவிட்டால் நீர் இந்த அரண்மனையில் மன்னர் முதல் மற்றவர்களுக்கெல்லாம் அடிமை வேலை செய்ய வேண்டும் என்று கூறினார்.” 

விகடகவியும் அதற்கு ஒப்புக்கொண்டு தனது கேள்வியைக் கேட்கத் தயாரானார். “அரசவைக் கவிஞரே ! இந்த உலகத்தில் எளிதில் அழியக்கூடியது எது ? அழியாதது எது ? இதுவே எமது கேள்விகள். 

அரசவைக்கவிஞர் தனக்குள்ளேயே ஒருமுறை கேள்வியைத் திருப்பிக்கேட்டுக் கொண்டார். “எளிதில் அழியக்கூடியது ? எளிதில் அழியாதது ?” கேள்விக்கான விடையைக் கண்டுப் பிடிக்க முடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தார்.

மன்னருக்கும், மற்றவர்களுக்கும் கூட கேள்விக்கான பதிலை சரிவர கண்டு பிடிக்க முடியவில்லை. எல்லோருமே குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். கடைசியில் விகடகவியே – கேள்விக்கான விடையை சொல்லலானார். 

‘அரசே ! இந்த உலகத்தில் ஆணவம் கொண்ட புகழ் உடனே அழிந்துவிடும். அடக்கமாக இருக்கின்ற புகழ் என்றுமே அழியாது. அதனை யாராலும் அழிக்க முடியாது. 

இதுதான் எனது கேள்விக்கான விடை என்று கூறினார். அதனைக் கேட்ட மன்னரும், மற்றவர்களும் வியப்பில் ஆழ்ந்தார்கள். கவிஞர் சித்ரவதனா தலை குனிந்தார்.

விகடகவியைப் பார்த்து, “கவிஞரே ! நான் போட்டியில் தோல்வியடைந்ததால், உம்மையே அரசவைக் கவிஞராக நியமிக்கும் படி மன்னரிடம் கேட்டுக் கொள்கிறேன்” என்றார். 

உடனே விகடகவி, “நான் ஏற்கனவே மன்னரிடம் ஒரு பொறுப்பில் இருக்கின்றேன். அதனால் எனக்கு இந்தப் பதவி வேண்டாம். நீரே இந்தப் பதவியில் இருந்து கொள்ளும். ஆனால் கவிஞர்களின் வயிற்றில் அடிக்காமல் நடந்து கொள்ளும்” என்று கூறினார். 

அதனைக் கேட்ட அனைவரும் வியப்பில் ஆழ்ந்தார்கள். உடனே மன்னர் “கவிஞரே ! நீர் யார் ? உமது குரலை இதற்கு முன்னர் நான் கேட்டதாக நினைவிருக்கின்றது என்று கூறினார். 

உடனே, விகடகவி தனது வேடத்தைக் கலைத்தார். அதனைக்கண்டு அனைவரும் ஆச்சர்யமடைந்தார்கள். விகடகவியும் “மன்னர் மன்னா ! அரசவைக் கவிஞர் இத்தனை நாட்களாக மற்ற கவிஞர்களுக்கு பரிசு கிடைக்காமல் அவர்களின் கவிதைகளை குற்றம் கண்டு பிடித்து விரட்டியடித்து வந்தார். நம் நாட்டில் அறிஞர்களும், கவிஞர்களும் வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு தாங்கள் பரிசளித்து கௌரவித்து, அவர்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்ற ஆசையினாலேயே இப்படி செய்தேன்” என்று கூறினார்.

உடனே மன்னர் அரசவைக் கவிஞரை தண்டித்து, அறிஞர்களையும், கவிஞர்களையும் வரவழைத்து அவர்களுக்கு பரிசும், பணமும் கொடுத்து அவர்கள் குடும்பத்தின் வறுமையைப் போக்கினார். 

தனது ஆட்சியில் நடந்த தவறை சுட்டிக்காட்டிய விகடகவிக்கு ஏராளமான பரிசுகள் கொடுத்துப் பாராட்டினார். ஒருவர் இன்னொருவருக்கு தர்மம் செய்வதைத் தடுக்கக் கூடாது.

Leave a Comment