உடையது விளம்பேல் | ஆத்திசூடி கதைகள் | tamil kathaigal

ஆலமரத்தில் ஆலன், வேலன் என்ற இரு கிளிகள் வசித்து வந்தன. ஒருநாள் ஆலன் இரைதேடச் சென்ற இடத்தில் வேடர் ஒருவர் அதன் இறக்கையின் மீது பலமாக கல்லெறிந்துவிட்டார். 

ஆனால் ஆலன் கிளி வேடர் பிடியிலிருந்து தப்பித்து தன் இருப்பிடத்திற்கு வந்துவிட்டது ! அதனால் இறக்கையை விரித்து பறந்து செல்ல முடியவில்லை. 

தான் இரை தேடிச் செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டது. ஆலன் கிளியின் கஷ்டத்தை உணர்ந்த வேலன் கிளி “நண்பனே ! நீ இரை தேடச் செல்ல வேண்டாம். இந்த மரத்தில் அமர்ந்தபடியே ஒய்வெடுத்துக்கொள். நான் சென்று உனக்குத் தேவையான பழங்களை எல்லாம் பறித்து வருகிறேன்.” என்று கூறியபடி மரத்தைவிட்டு பறந்து அருகில் இருந்த பழத் தோட்டத்திற்குச் சென்றது.

ஆலன் கிளிக்கும், தனக்கும் தேவையான பழங்களைப் பறித்த வேலன் கிளி தனது இருப்பிடத்திற்கு வருகின்ற பாதையில் ஒரு குயிலை சந்தித்தது. கிளியின் அலகில் பழங்கள் இருப்பதைக் கண்ட குயில் “கிளியக்கா .. கிளியக்கா – நான் பழம் சாப்பிட்டு ரொம்ப நாட்களாகின்றன. எனக்கும் ஒரு பழம் தருகின்றீர்களா … ?” என்று அன்போடு கேட்டது. 

உடனே கிளியும் குயிலுக்குப் பழத்தைக் கொடுத்தது. அந்த பழத்தை சாப்பிட்ட மைனா “கிளியக்கா பழம் மிகவும் ருசியாக இருக்கின்றதே ! இந்தப் பழத்தை எங்கிருந்து பறித்தீர்கள் ?” என்று பணிவோடு கேட்டது. கிளி தான் பழம் பறித்து வரும் இடத்தைப் பற்றி இதுவரையிலும் யாருக்குமே தெரியப் படுத்தவில்லை. 

இப்போது இந்தக் குயில் கேட்பதால் அதனைத் தெரியப்படுத்தலாம் என்று முடிவு செய்தது. உடனே குயிலைப் பார்த்து, “குயிலே ! இந்தப் பாதையின் வழியாக சற்று தூரம் பறந்து சென்றால் ஒரு பழத்தோட்டம் தென்படும். அந்தப் பழத் தோட்டத்தில் இருந்துதான் நான் பழங்களைப் பறித்து வருகிறேன் ” என்று கூறியது. 

உடனே குயில் அங்கிருந்து வேகமாகப் பழத்தோட்டத்தை நோக்கி பறந்து செல்லத் தொடங்கியது. வழியில் இளைப்பாற வேண்டி ஒரு மரத்தில் அமர்ந்தது குயில். அப்போது மரத்திலிருந்த அணில் குயிலை சந்தித்தது. 

“குயிலக்கா நலமாக இருக்கிறாயா ? உன்னைப் பார்த்து வெகு நாட்கள் ஆகின்றதே ! எப்படி இருக்கின்றாய் ?” என்று அன்போடு கேட்டது. 

உடனே குயில், “அணில் தம்பி, நான் நலமாக இருக்கின்றேன். இப்போது அருகே இருக்கும் பழத்தோட்டத்திற்குச் சென்று பழங்களை சாப்பிடச் செல்கிறேன்” என்று கூறியது. 

அதனைக்கேட்ட அணில் பூச்சர்யமானது. “குயிலக்கா இங்கே பழத் தோட்டம் இருக்கின்றதா ? இது வரையிலும் எனக்குத் தெரியாதே !” என்று வியப்போடு கூறியது.

“அணில் தம்பி ! எனக்கும் கிளியக்கா சொல்லித்தான் தெரியும்” என்றது. உடனே அணில் “குயிலக்கா நீங்கள் முதலில் செல்லுங்கள். பின்பு நான் எனது நண்பர்களை அழைத்துக் கொண்டு வருகிறேன்” என்று கூறியது. 

குயில் வேகமாக பழத்தோட்டத்தைத் தேடிப் பறந்து செல்லத் தொடங்கியது. சிறிது நேரத்தில் அணில் மற்ற அணில்களையும் அழைத்துக் கொண்டு பழத் தோட்டத்தை நோக்கிச் சென்றது. 

அணில்கள் எல்லாம் கூட்டமாக சேர்ந்து கொண்டு பழத்தோட்டத்தில் புகுந்து, பழங்களை எல்லாம் கடித்துக் குதறி சின்னா பின்னமாக்கின. அந்த நேரம் அங்கு வந்த பழத்தோட்டக்காரர் அணில்களின் செய்கையினைப் பார்த்து ஆத்திரம் கொண்டார். 

இந்த அணில்களின் தொல்லை தாங்க முடியவில்லை. இனிமேலும் நாம் சும்மாயிருந்தால் தோட்டத்தில் இருக்கின்ற பழங்கள் எல்லாம் ஒன்றுக்கும் உதவாமலாகிவிடும் என்று நினைத்தார். 

அவர், அடுத்த நாளே பழங்களைச் சுற்றிலும் பாதுகாப்பாகக் கம்பி வலையினை அமைத்து மூடி மறைத்துவிட்டார். மறுநாள் வழக்கமாக பழங்களைப் பறிக்க வேண்டி பழத்தோட்டத்தில் புகுந்த கிளி அதிர்ச்சியடைந்தது. 

பழங்கள் எல்லாம் வலையினால் மூடியிருப்பதைக் கண்டு, கவலையுடன் பழங்களைப் பறிக்க முடியாமல் தன் இருப்பிடத்தை நோக்கித் திரும்பிப் பறந்து வந்தது. 

வரும் வழியில் குயில் கிளியை சந்தித்தது. “கிளியக்கா ! நீங்கள் பழத்தோட்டத்திற்கு சென்று பழங்களைப் பறிக்க முடியாமல் தானே வருகின்றீர்கள்! என்ன செய்வது, நான் அணிலிடம் பழத்தோட்டத்திற்கு செல்வதாக உளறிவிட்டேன். 

அணில்கள் கூட்டமாகச் சென்று பழத்தோட்டத்தில் உள்ள பழங்களை நாசம் செய்யவே தோட்டக்காரர் வேலியமைத்துவிட்டார்” என்று வருத்தத்துடன் கூறியது. 

கிளி பழத்தோட்டத்திற்குச் சென்று பழங்களை பறித்து செல்லமுடியாத காரணத்தால் வேறு எங்காவது பழங்கள் கிடைக்கிறதா என்று இரை தேட வேண்டி பறந்து செல்லத் தொடங்கியது. 

“பழத்தோட்டம் இருக்கின்ற இடத்தை இது வரையிலும் ரகசியமாக பாதுகாத்து வந்தேன். இந்தக் குயிலிடம் சொல்லப்போய் இப்போது நண்பனுக்கும், எனக்கும் பழங்கள் கிடைக்காமல் ஆகிவிட்டதே ! இனி வேறு இடம் சென்று நண்பனுக்கு இரை தேடிக் கொடுக்க வேண்டியது தான்” என்று கவலையுடன் பறந்தது கிளி.  

பிறருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இரகசியத்தை வெளியே சொல்லக் கூடாது.

Leave a Comment