அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதமை | நீதிக் கதைகள் | Tamil story

அந்த அடர்ந்த காட்டுக்கு நடுவில் ஒரு குளம் இருந்தது. மீன்கள், நண்டுகள், தவளைகள் என்று எல்லா வகையான நீர் வாழ் இனங்களும் அங்கு மகிழ்ச்சியோடு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தன. 

அவற்றுள் சஹஸ்ரபுத்தி, சதபுத்தி என்ற இரு அழகிய மீன்களும் இருந்தன. அந்தக் குளத்திலுள்ள மற்ற மீன்களைவிட பெரியவை. தம்முடைய அழகிய தோற்றம், அறிவாற்றல் ஆகியவற்றைப் பற்றி அவை இரண்டிற்கும் அதிகப் பெருமை உண்டு.

அதே குளத்தில் ஏகபுத்தி என்ற தவளை தன் மனைவியோடு வசித்து வந்தது. அங்கு மீன்களுக்கும் தவளைகளுக்குமிடையே நல்ல நட்பு இருந்தது. எந்தத் தகராறும் இல்லாமல் அவை நல்லபடியாக வாழ்ந்தன.

ஒருநாள், காட்டுக்குள் இருந்த ஆற்றில் மீன் பிடித்து விட்டு இரு மீனவர்கள் வந்து கொண்டிருந்த போது அந்தக் குளத்தைக் கண்டனர். அப்போது மாலைப்பொழுது முடியும் நேரம். வழக்கம் போல் எல்லா மீன்களும் தவளைகளும் விளையாடிக் கொண்டிருந்தன.

சஹஸ்ரபுத்தி, சதபுத்தி, ஏகபுத்தி ஆகியவற்றோடு மற்றவையும் விளையாட்டில் கலந்து கொண்டன. குளத்தை விட்டு மேலே எழும்பிக் குதித்து ஒன்றையொன்று துரத்தி விளையாடிக் கொண்டிருந்தன. அந்த அழகிய காட்சியைக் கண்ட மீனவர் இருவரும் மிகவும் வியப்படைந்தனர். 

அங்கேயே நின்று அந்தக் காட்சியைப் பார்த்து ரசித்தனர். “அவை எவ்வளவு அழகாக இருக்கின்றன !” என்றான் ஒருவன். 

“ஆமாம். அவற்றில் எத்தனை வகைகள் இருக்கின்றன, பார்த்தாயா ?” என்றான் மற்றவன்.

“இந்தக் குளம் அதிக ஆழமில்லாதது போல் காணப்படுகிறதே” என்று கேட்ட முதலில் பேசிய மீனவன் “நாம் சில மீன்களைப் பிடிக்கலாமா ?” என்று கேட்டான்.

“இப்போது அதிக நேரமாகிவிட்டது. தவிர பெரும் சுமையைத் தூக்கிக் கொண்டு நாம் அதிகத் தொலைவு செல்ல வேண்டும். நாம் நாளை இங்கு வரலாம்” என்று யோசனை கூறினான் அடுத்தவன். 

இருவரும் அந்த இடத்தை விட்டுச் சென்றனர். ஏகபுத்தி, குளத்திலிருப்பவைகளைப் பார்த்து, “அந்த மீனவர்கள் பேசியது உங்கள் காதுகளில் விழுந்ததா ? நாம் இந்தக் குளத்தை விட்டு வேறு பாதுகாப்பான இடத்திற்குச் சென்று விடலாம்” என்று கூறியது.

“யாரோ இரண்டு மீனவர்கள் நாளை இங்கு வந்து நம்மைப் பிடிக்கப் போவதாகப் பேசிக் கொண்டதற்காக, நம்முடைய இந்த இடத்தை விட்டு நாம் ஓட வேண்டுமா ? அவர்கள் நாளை இங்கு வராமலே கூட இருக்கலாம் என்பது நமக்குத் தெரியாதா ?” என்ற சஹஸ்ரபுத்தி, தொடர்ந்து பேசியது, “அவர்கள் நம்மைப் பிடிப்பதற்காக வந்தாலும் தப்பித்துக் கொள்ள என்னிடம் ஆயிரம் வழிகள் இருக்கின்றனவே !”

உன்னுடைய ஆயிரம் வழிகளும் தோற்றாலும் தப்பித்துக் கொள்ள மேலும் நூறு வழிகள் எனக்குத் தெரியுமே !” என்றது சதபுத்தி. 

“இரண்டு மீனவர்கள் நம்முடைய இடத்தைவிட்டு நம்மைத் துரத்த நாம் அனுமதிக்கக் கூடாது.” என்று மேலும் கூறியது. அந்தக் குளத்திலுள்ள மற்றவை எல்லாம் அந்த யோசனையை ஏற்றுக்கொண்டன. 

“நல்லது. எனக்கு ஓர் உபாயம் மட்டுமே தெரியும். ஆபத்து வருவதற்கு முன்னால் அந்த இடத்தை விட்டு நீங்க வேண்டும் என்பதே அது.” என்று கூறிய ஏகபுத்தி தன் மனைவியோடு அந்தக் குளத்தை விட்டுப் பாதுகாப்பான இடத்தைத் தேடிச் சென்றது.

அவர்கள் போவதைக் கண்டு எல்லா மீன்களும் தவளைகளும் நண்டுகளும் ஏளனமாகச் சிரித்தன. மறுநாள் அங்கு வந்த மீனவர்கள் பெரிய வலையைக் குளத்தில் வீசினார்கள். 

“ஓ கடிப்பதற்கு முடியாமல் இந்த வலை மிகவும் தடியாக இருக்கிறதே” என்று சோகத்தோடு சஹஸ்ரபுத்தி கத்தியது.” என்னாலும் இதிலிருந்து தப்ப முடியவில்லையே ! வலையை விட்டு வெளியில் வந்தால் தானே என்னால் எதையாவது செய்ய முடியும் ? ” என்று சதபுத்தி வருந்தியது.

ஏகபுத்தியின் அறிவுரையை நாம் கேட்டிருக்க வேண்டும் என்று துயரத்தோடு கூறியது மற்றொரு மீன். மீன்கள், நண்டுகள், தவளைகள் ஆகியவற்றைப் பிடித்த மீனவர்கள் அவற்றைப் பெரிய கூடையில் இட்டு எடுத்துச் சென்றனர். ஒரு பெரிய கல்லுக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்த ஏகபுத்தி, அருகிலிருந்த தன் மனைவியிடம், ” சரியான சமயத்தில் நான் அந்த முடிவை எடுத்திருக்க விட்டால் மற்றவர்களோடு நாமும் இந்நேரம் அந்தக் கூடைக்குள் இருந்திருப்போம், ” என்று கூறியது. 

நீதி : வருமுன் காப்பதே அறிவுடைமை.

Leave a Comment