கஞ்சனுக்கு கஞ்சனே துணைவன் | பழமொழிக் கதைகள் | tamil story

உள்ளத்தில் கஞ்சத்தனமிருந்தால் உடல் கெஞ்சும் தன்மைதனை உண்டாக்கும். அதற்கு உதாரணமாக விளங்கியவன் கந்தவேல், அவன் ஒரு கடைந்தெடுத்த கஞ்சன் என்று ஊராரால் பெயர் பெற்றவன். 

அந்த அளவிற்கு சாப்பிட்ட எச்சில் கையால் காக்கையைக்கூட விரட்டாதவன். சாப்பிட்ட கைவிரல்களில் ஒட்டியிருக்கும் சோற்றுப் பருக்கைகள், காக்கையை ச்சூ … ச்சூ என்று சொல்லி விரட்டும் போது பருக்கைகள் விழுந்து விட்டால் என்னாவது? என்று விரல்களிலிருக்கும் பருக்கைகளையெல்லாம் நக்கி சுத்தப்படுத்திய பிறகு தான் காக்கையை விரட்டுவான் என்பதன் பொருள் இது. 

அப்படிப்பட்ட மகாகஞ்சன் கந்தவேல். அவனுக்கொரு மகன் நந்த கோபால் இருந்தான்.

அப்பனுக்குத் தப்பாமல் மகன் இருந்தான். அப்பனும் மகனும் எப்படியெல்லாம் கஞ்சத்தனமாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி கலந்தாலோசித்துக் கொள்வார்கள். 

கஞ்சத்தனத்தில் பேர்பெற்றுவந்தனர். கஞ்சர்களுக்கென போட்டி வைத்தால், அதில் வெற்றி பெறும் அளவிற்கு இவர்களின் கஞ்சத்தனம் மேலோங்கி வந்தது. 

இவ்வாறு நாட்கள் பல கடந்து கொண்டிருந்தன. ஒருநாள் … மதிய வேளை, நந்தகோபாலின் மனைவி, கந்தவேலுக்கும், நந்தகோபாலுக்கும் உணவு பரிமாறினாள். 

மருமகள் வைத்திருந்த ரசம் மாமனார் கந்த வேலுவுக்கு மிகவும் பிடித்திருந்தது. “ மருமகளே ! இன்னைக்கு ரசம் மிகவும் நல்லா சுவையாயிருக்கு ” என்று பாராட்டினார்.

உடனே அருகில் உட்கார்ந்து சாப்பிட்டுக்  கொண்டிருந்த நந்தகோபால்,

 அப்பா ! நம்ம கடையிலே ‘ மிளகு ‘ நிறுத்துக் கொடுத்து விட்டு கை கழுவின நீரைக் கொண்டு வைக்கப்பட்ட மிளகு ரசமப்பா இது என்று பெருமையாகக் கூறினான். 

அதனைக் கேட்ட கந்தவேல், ” டேய் நந்து, பெரிய லந்து வேலை செய்திருக்கே. மிளகு நிறுத்துக் கொடுத்த பிறகு ஒவ்வொரு விரலாகக் கழுவி, அந்த தண்ணியை ஒரு பாட்டிலில் பிடித்து வைத்திருந்தால் பல நாட்கள் ரசம் வைத்திருக்கலாமே. 

இப்படி ஒரேயடியாக கை முழுவதையும் ஒரே நாள்ளே கழுவி ரசம் வைக்கச் சொல்லி வீணாக்கி விட்டாயே” என்று சொல்லி கந்தவேல் மிகவும் வருத்தப்பட்டார்.

Leave a Comment