மனக்கவலை | அப்பாஜி கதைகள் | Tamil story

வழக்கம்போல் ஒரு நாள் ராயரின் யானைப் படைகள் நகர்வலம் சென்றன. அப்போது, தெருவில் ஒரு துடுக்கான வாலிபன் விளையாட்டாகத் தனக்கு முன்னால் வரும் யானைகளின் தந்தங்களைப்  பிடித்துப் பத்தடி தூரம் அலட்சியமாக தள்ளிவிட்டுப் போவதை வியப்புடன் கவனித்த ராயரும் தம் அமைச்சர் அப்பாஜியிடம் “இந்தச் சிறு பயலுக்கு இவ்வளவு பலம் எப்படி சாத்தியம் ?” என்று கேட்டார். 

அதற்கு அப்பாஜி “அரசே ! கவலையற்ற வாழ்வு ஒரு மனிதனிதனுக்கு எல்லையற்ற பலமாகும்! அந்தச் சிறு வாலிபன். எந்தவிதக் குடும்பப் பொறுப்போ கவலையோ இல்லாமல் வளர்க்கப் பட்டிருப்பான்!” என்றார்.

அதை சோதித்துப் பார்க்க விரும்பிய ராயர் அந்த வாலிபனுடைய பிறப்பு வளர்ப்பைப் பற்றி ஒற்றர்கள் மூலம் விசாரித்தார் . அவன் குடும்பத்திற்கு ஒரே பிள்ளையுமாதலால் அவனுடைய தாயார் அவனுக்கு எவ்விதக் கவலையோ குறைவோ இல்லாமல் வளர்த்து வருகிறார் என்பதைத் தெரிந்து கொண்டார் . 

அதேநேரம் அப்பாஜி தன் வார்த்தையை நிரூபிக்க அந்த வாலிபனின் தாயாரை வரவழைத்து “அம்மா ! உன்னுடைய பிள்ளையைக் குடும்பப் பொறுப்புகளை சொல்லி நல்ல வாலிபனாக வளர்க்க வேண்டும்! அதனால் அவன் உண்ணும் உணவிற்கு உப்புப் போடாதே! கேட்டால் உப்பு சம்பாதித்து வரும்படிச் சொல் !” என்றார். 

அதன் படி தாயும் செய்தாள். அது முதற்கொண்டு அந்த வாலிபன் ” எப்படி உப்பு சம்பாதிப்பது ? ” என்ற கவலையால் மனம் வாடிப் போனான் அவன் உடலும் உள்ளமும் சோர்ந்தது. 

சில நாட்கள் கழித்து அவன் தெருவில் செல்லும் போது அவன் எதிரில் ஒரு யானையை அனுப்பும்படி அப்பாஜி வீரர்களிடம் சொன்னார் அந்த வாலிபன் வழக்கம்போல் யானையின் தந்தத்தைப் பிடித்து அலட்சியமாகத் தள்ள முயலும் போது அந்த யானை தன் தும்பிக்கையால் அவனை வெகு அலட்சியமாகத் தள்ளி விட்டுப் போய்விட்டது ! வாலிபன் தடுமாறி கீழே விழுந்தான் அதை ராயருக்கு அப்பாஜி காண்பித்து ” மனக்கவலை பலக்குறைவு ! என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் ” என்றார் .

Leave a Comment