கதவும் ஆணியும் | நீதிக் கதைகள் | tamil story

ஒரு ஊரில் ஒரு அப்பாவும் பிள்ளையும் இருந்தார்கள். அப்பா பெயர் பத்ரகிரி, மிகவும் நல்லவர். மகன் பெயர் ராஜன், அவன் ஊரில் உள்ள யாவரையும் ஏமாற்றி வாழ்ந்து கொண்டு வந்தான். அப்பா மகனை திருத்துவதற்காக எவ்வளவோ வழிமுறைகள் மேற்கொண்டார். மகன் திருந்தவேயில்லை. முடிவாக ஒரு நாள் அவர் தன் மகனிடம் ‘ நீ ஒவ்வொரு ஆளை ஏமாற்றும் போது நம் வீட்டுக் கதவில் ஒரு ஆணி அடிக்கப் போகிறேன் அதை பார்த்தாவது நீ திருந்த வேண்டும் என்றார். 

அதை ராஜன் கண்டுகொள்ளவேயில்லை. ஆனால் ராஜன் செய்யும் ஒவ்வொரு தவறிற்கும் அவனது அப்பா அவர்கள் வீட்டுக்கதவில் ஒரு ஆணி அடிக்கத் துவங்கினார். மகன் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பலநாட்களாக ஊரை ஏமாற்றிவந்தான். வருடங்கள் கடந்தது. 

ஒரு நாள் இரவு ராஜன் வீடு திரும்பி வந்த போது தன் வீட்டுக் கதவில் ஆயிரக்கணக்கில் ஆணிகள் அடிக்கப் பட்டிருப்பதைக் கண்டான். அந்தக் காட்சி அவன் மனதை உறுத்த துவங்கியது. ஆணிகளைத் தன் விரலால் தொட்டுப் பார்த்தான் இடைவெளியின்றி ஆணிகள் அடிக்கப்பட்டிருந்தன. 

சே நான் எவ்வளவு தவறுகள் செய்திருக்கிறேன். நான் மிக மோசமான மனிதன், தன்னை மன்னிக்கும்படியாக அப்பாவிடம் கேட்க போகிறேன் என்று மனம் வருந்தினான். 

மறுநாள் அப்பாவிடம் நான் திருந்தி வாழப்போகிறேன் இனி நான் எவரையும் ஏமாற்ற மாட்டேன் ‘ என்று மன்னிப்புக் கேட்டான். 

 அப்பா ராஜன் நீ ஏமாற்றாமல் இருந்தால் மட்டும் போதாது. மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அப்படி நீ செய்யும் ஒவ்வொரு நல்லதிற்கும் கதவிலிருந்து ஒரு ஆணியைப் பிடுங்கி எடுத்து விடுகிறேன் ‘ என்று சொன்னார். 

மறுநாளில் இருந்து ராஜன் தன்னால் முடிந்த அளவு உதவிகள் செய்யத் துவங்கினான். அப்பாவும் அவன் செய்யும் நல்ல காரியத்திற்கு ஏற்ப கதவில் இருந்த ஆணிகளைப் பிடுங்கிக் கொண்டேயிருந்தார். ஆனால் ஏமாற்றுவதைப் போல உதவி செய்வதை மிக வேகமாக செய்ய முடியவில்லை. 

ஆகவே அவன் ஒவ்வொரு நாள் வீடு திரும்பும்போதும் கதவில் இருந்த ஆணிகளை உற்று கவனிப்பான். இன்னும் இவ்வளவு ஆணிகள் இருக்கிறதே என்று வேதனைப்படுவான். எப்படியாவது அந்த ஆணிகள் ஒன்று கூட இல்லாமல் செய்ய வேண்டும் என்று மனதிற்குள் உறுதி எடுத்துக் கொள்வான். பல வருடங்கள் கடந்து போனது. அப்பாவும் வயோதிகம் அடைந்து படுக்கையில் வீழ்ந்தார்.

முடிவாக ஒரு நாள் மகன் ஆற்றில் வெள்ளத்தில் அடித்துப்போக இருந்த ஒரு குடும்பத்தை தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் குதித்து காப்பாற்றினான் என்று கேள்விபட்டு கதவில் அடிக்கப்பட்டிருந்த கடைசி ஆணியையும் பிடுங்கி எறிந்தார். மகன் ஆணிகள் இல்லாத கதவைப் பார்த்து பெருமூச்சிட்டபடியே அப்பா இனி நான் நல்லவன் தான் இல்லையா என்று கேட்டான் அப்பா ‘ராஜன் நீ இந்தக் கதவை தொட்டுப் பார்த்து வா ‘ என்று சொன்னார். 

ஒரு முறை நன்றாக மகன் கதவை நெருங்கிச் சென்று பார்த்தான். கதவு முழுவதும் ஆணி அடிக்கப்பட்ட துளைகள் அப்படியே இருந்தன. அதைக் கண்டு அப்பா சொன்னார். ‘ பார்த்தாயா கதவு முன்பு நன்றாக இருந்தது. நீ செய்த தவறின் காரணமாகத் தான் ஆணி அடிக்கப்பட்டது. நீ திருந்தியபிறகு ஆணியைப் பிடுங்கியாகி விட்டது. ஆனால் தழும்புகள் அப்படியே தானிருக்கின்றன. 

இப்படித் தான் நீ செய்த தவறுகள் மன்னிக்கப்படலாம். ஆனால் அதனால் ஏற்பட்ட விளைவுகள் ஒருபோதும் அழிவதேயில்லை. அதனால் தவறு செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது என்றார். அந்தக் கதவு தன் மனசாட்சியின் வடிவம் போலிருப்பதை அன்று தான் மகன் உணர்ந்தான். அதன்பிறகு அவன் நல்லவனாக தன் வாழ்நாளின் இறுதிவரை வாழ்ந்தான். 

இது துருக்கியைச் சேர்ந்த நாடோடிக் கதை, காலம் நாம் ஒவ்வொருவரை ஏமாற்றும் போதும் நம் வீட்டுக் கதவிலும் இது போன்ற ஆணி ஒன்றை அடித்துக் கொண்டு தானிருக்கிறது. அது கண்ணிற்கு புலப்படுவதேயில்லை . அதை உணர்ந்து கொண்டால் நமது தவறுகள் தானே குறைந்துபோய்விடும்.

2 thoughts on “கதவும் ஆணியும் | நீதிக் கதைகள் | tamil story”

Leave a Comment