மணல் எழுத்து | நீதிக் கதைகள் |Tamil sort story

புனித யாத்திரை ஒன்றிற்காக கோபன் சோபன் என்ற இரண்டு நண்பர்கள் பாலைவனத்தில் ஒன்றாகப் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். கோபன் பெரிய பணக்காரன் சோபன் மிகவும் ஏழை, இருவரும் ஒன்றாக ஒரே பள்ளியில் படித்தவர்கள். கோபனிற்கு எப்போதுமே பணக்காரத் திமிர் அதிகம். சோபனோ தனது ஏழ்மையிலும் மிகுந்த அன்பும் நட்புமாக இருப்பான். 

கோபன் எப்போதுமே சோபனை மட்டம் தட்டிக் கொண்டேயிருப்பான். ஆனாலும் சோபன் தன் நண்பனை விட்டுக் கொடுக்கவே மாட்டான். குறை சொல்லவே மாட்டான். ஆகவே இருவரும் ஒன்றாக பாலைவனத்தில் பயணம் செய்ய ஆரம்பித்தார்கள். 

வெயிலும் எல்லையற்றுப் பரந்த மணலும் அவர்கள் பயணத்தை கடுமையாக்கியது. கையில் வைத்திருந்த தண்ணீரையும் உணவையும் பகிர்ந்து சாப்பிட்டபடியே அவர்கள் பாலைவனத்தைக் கடந்து கொண்டிருந்தார்கள். 

கோபன் தனது உணவை ஏன் சோபனோடு பகிர்ந்து சாப்பிட வேண்டும் என்று எரிச்சல் கொண்டான், அதனால் நண்பனை ஏமாற்றி பாதி உணவைத் தானே சாப்பிடத் துவங்கினான். இது போல தண்ணீரையும் அவன் ஒருவனே குடித்து வந்தான்.

 தன்னை கோபன் ஏமாற்றுகிறான் என்று தெரிய வந்த போதும் சோபன் கோபம் கொள்ளவேயில்லை. பாலைவனத்தில் ஒரு இடத்தில் ஈச்சைமரமிருந்தது. அதில் உதிர்ந்த பழங்களை எல்லாம் சோபன் ஓடிப்போய் பொறுக்கி சேகரித்தான், கோபன் அதை தட்டிப் பறித்துக் கொண்டு அவை யாவும் தனக்கே சொந்தமானவை என்றான். அதற்கு சோபன் உன்னிடம் தான் தேவையான உணவு இருக்கிறதே பிறகு ஏன் இதை வேறு பறிக்கிறாய், எனக்கு பசியாக இருக்கிறது. ஈச்சம்பழங்களைத் தந்துவிடு என்று கேட்டான். 

அதைக்கேட்டு கோபப்பட்ட கோபன் அப்படியானால் நான் உன்னை ஏமாற்றுகிறேன் என்று குற்றம் சொல்கிறாயா என்று சண்டையிட்டு சோபன் முகத்தில் ஓங்கி ஒரு அடி அடித்தான். சோபனின் மூக்கு உடைபட்டு ரத்தம் வழிந்தது. 

அந்த நிமிசமே இருவரும் பிரிந்து தனித்தனியே நடக்கத் துவங்கினார்கள். சோபன் வலியும் அவமானமும் கொண்டவனாக பாலைவனத்தின் மணலில் இன்று நண்பன் கோபன் என்னை அடித்து விட்டான் என்று பெரிதாக எழுதி வைத்து விட்டு நடக்கத் துவங்கினான். கையில் இருந்த உணவும் தண்ணீரும் தீர்ந்து போய்விடவே கோபனால் நடக்கவே முடியவில்லை சோபனும் பசியோடு பாதி மயக்கத்தில் நடந்து கொண்டிருந்தான். இருவரும் தனித்தனியாக நடந்து தண்ணீர் கிடைக்காமல் அலைந்து திரிந்தார்கள். 

வெயில் மிகவும் கொதித்தது. நாக்கு உலர்ந்து போய் தண்ணீர் தேடி அலைந்தார்கள். அப்போது ஒரு இடத்தில் சிறிதளவு தண்ணீர் கசிவதைக் கண்டு கோபன் ஓடிச் சென்று தண்ணீர் குடிக்க முயன்றான். திடீரென சோபனின் நினைவு வந்தது, சே இவ்வளவு காலம் பழகிய நண்பனை ஒரு கஷ்டம் என்று வந்ததும் அடித்து விரட்டிவிட்டோமே என்று தோன்றியதும் சோபன் பெயரை சொல்லி சப்தமிட்டு அழைத்தான். 

அந்த குரல் கேட்டு ஒடோடி வந்த சோபன் அங்கே ஒரு ஆள் குடிக்குமளவு தண்ணீர் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தான். 

இதில் உள்ள தண்ணீரை ஒருவன் மட்டுமே குடிக்க முடியும் நீயே குடித்துக் கொள் ‘ என்றான் கோபன். உடனே தாகமிகுதியில் சோபன் அந்த தண்ணீரை முழுமையாக குடித்து விட்டு நண்பனை கட்டிக் கொண்டு நன்றி தெரிவித்தான். இருவரும் ஒன்றாக நடக்கத் துவங்கினார்கள். 

சோபன் அங்கிருந்த ஒரு கல்லில் இன்று என் நண்பன் கோபன் மறக்க முடியாத ஒரு உதவி செய்தான் ‘ என்று எழுதி வைத்தான். அதைக்கண்ட கோபன் ‘ நான் உன்னை அடித்த போது அதை மணலில் எழுதி வைத்தாய். உதவி செய்த போதோ அதை கல்லில் எழுதி வைக்கிறாய் அது ஏன் என்று கேட்டான். 

அதைக்கேட்ட சோபன் ‘ நண்பா நண்பர்களுக்குள் நடந்த தவறுகள் காற்றோடு போக வேண்டியவை. அதனால் அதை மணலில் எழுதி வைத்தேன். ஆனால் செய்த நன்றி என்றும் மறக்கக் கூடாதது ஆகவே அதை கல்லில் எழுதி வைத்தேன் என்று சொன்னான். நட்பு என்பது கைமாறில்லாத நன்றியுடையது என்பதை கோபன் அன்று தான் புரிந்து கொண்டான்.. 

இது ஒரு அரபுக்கதை. உலகில் எந்த மனிதனும் தனியானவன் இல்லை. அவனது செய்கைகளும் வெறுப்பும் கோபமுமே அவனைத் தனிமைப் படுத்துகின்றன . வாழ்வில் தேடித்தேடி நாம் சேகரித்து வைக்கவேண்டியது பணத்தையல்ல, நல்ல நண்பர்களைத் தான்.

Leave a Comment