மூன்று கனவுகள் | நீதிக் கதைகள் | tamil kathaigal

 முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் மூன்று சிறிய மரங்கள் நின்றன. அவை, எதிர்காலத்தில் தாங்கள் வளர்ந்து பெரியவை ஆனதும் என்னவாகப்போகிறோம் என்பதைப் பற்றி கனவு கண்டுகொண்டிருந்தன.

முதலாவது மரம், வானில் உள்ள நட்சந்திரங்களைப் பார்த்து, “நான் இது போல ஒளிர விரும்புகிறேன். தங்க நிறம் பூசப்பட்டு, வைரங்களைச் சுமந்திருக்க விரும்புகிறேன் உலகிலேயே மிக அரிய நகைப் பெட்டியாக மாற விரும்புகிறேன்” என்றது. 

இரண்டாவது மரம், தொலைவில் உள்ள கடலை காட்டி நான் கப்பலாக மாறி மாபெரும் கடல்களைக் கடக்கப் போகின்றேன். பேரரசர்களையெல்லாம் தாங்கிச் செல்வேன் உலகிலேயே அதிபலம் பொருந்திய கப்பலாக நான் இருப்பேன், என்றது.

மூன்றாவது சிறிய மரம் தனக்குக் கீழே இருந்த பள்ளத்தாக்கைப் பார்த்தது. அங்கு ஆண்களும் பெண்களும் சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டிருந்தனர். “நான் இம்மலை உச்சியை விட்டுப் போகப்போவதே இல்லை. நான் மிகவும் உயரமாக வளர விரும்புகிறேன். அப்போது என்னைப் பார்க்கும் மக்கள் என்னை இவ்வளவு பெரிய மரமாக வளர்த்த கடவுளைப் பற்றி நினைப்பார்கள். ஆகவே உலகிலேயே மிக உயர்ந்த மரமாக நானே இருப்பேன், ” என்றது. 

பல வருடங்கள் கடந்தன. மழையும் வெயிலும் வந்து சென்றன. அந்த சிறிய மரங்களும் உயரமாக வளர்ந்தன. ஒரு நாள், மூன்று விறகுவெட்டிகள் அந்த மலை மீது ஏறினர். முதலாவது விறகுவெட்டி முதல் மரத்தைப் பார்த்து, இந்த மரம் மிகவும் அழகாக இருக்கின்றது. எனக்கு இது போதும் என்றான். அவனுடைய பளிச்சிடும் கோடாரியினால் வெட்டுண்டு அந்த முதல் மரம் கீழே சாய்ந்தது. ‘ நான் இப்போது ஒரு அழகிய நகைப்பெட்டியாக மாறப்போகின்றேன். வைரம் முத்து பவளம் என பெரும் பொக்கிஷங்களைத் தாங்கப்போகின்றேன். ” என அந்த முதல் மரம் சந்தோஷமாக சொன்னது. 

இரண்டாவது விறகுவெட்டி இரண்டாவது மரத்தைப் பார்த்தான். ” இந்த மரம் மிகவும் உறுதியாக இருக்கின்றது. எனக்கு இது மிகவும் பொறுத்தமானது, ” என்றான். அவனுடைய கோடாரியின் வீச்சில் வெட்டுண்டு அந்த இரண்டாவது மரமும் கீழே சாய்ந்தது. ” நான் இப்போது கப்பலாகப் போகின்றேன் , பேரரசர்கள் பயணம் செய்யும் பெரிய கப்பலாக விளங்கப்போகின்றேன் என அந்த இரண்டாவது மரம் நினைத்தது.

மூன்றாவது மரம், விறகுவெட்டி தன்னை நோக்கி திரும்பியபோது மனம் திடுக்கிட்டுப் போனது. அம்மரம் எதிர்ப்பின்றி அமைதியாக நின்றது. ‘இந்த மரமே எனக்குப் போதும்,’ என ஒரே வீச்சில் மரத்தைச் சாய்த்தான். மூன்றாவது மரமும் கீழே சாய்ந்தது. 

முதல் மரம் தன்னை விறகு வெட்டி தச்சு வேலை செய்யுமிடத்திற்கு கொண்டு வந்தது கண்டு மிகவும் சந்தோஷப்பட்டது. ஆனால் தச்சன் அதை தங்கப்பெட்டியாக்கவில்லை. மாறாக ஆடுமாடுகளுக்கு குடி தண்ணீரும் தீனியும் வைக்கும் மரத் தொட்டியாக அதை வடிவமைத்தான். தங்கப் பெட்டியாக நினைத்த மரம் தூசுபடிந்தும் பசியோடிருக்கும் பண்ணை மிருகங்களுக்கு நீர்தொட்டியாக உருமாறியது. 

இரண்டாவது மரம், தன்னை விறகுவெட்டி ஒரு கப்பல் கட்டுமிடத்திற்குக் கொண்டு சென்றவுடன் மிகுந்த உற்சாகமடைந்தது. ஆனால் , அதை கப்பல் செய்ய அவன் பயன்படுத்தவில்லை. மாறாக, சிறிய மீன்பிடி படகாக உருமாற்றினான். பெரிய கடலில் பிரம்மாண்டமான கப்பலாகப் போக நினைத்த மரம் முடிவில் சிறிய ஏரியில் பயணம் செய்யும் மீன்பிடி படகாக மாறியது. 

மூன்றாவது மரத்தை விறகு வெட்டி தனித்தனிதுண்டுகளாக வெட்டி இதை என்ன செய்வது என்று தெரியாமல் ஓரமாக போட்டு வைத்தான். கடவுள் என்னை ஏன் இப்படி முடக்கிப் போட்டார், நான் அவர் புகழ்பாடத்தானே விரும்பினேன் என்று அந்த மரம் மிகவும் வருத்தப்பட்டது. 

 பல நாட்களும் இரவுகளும் கடந்தன. மரங்களும் தாங்கள் கண்டு வந்த கனவுகளையெல்லாம் மறந்து விட்டிருந்தன.

ஆனால், ஒரிரவு, ஒரு அடிமைப் பெண் குழந்தை பெற இடமில்லாமல் மாட்டு தொழுவத்தில் வந்து குழந்தை பெற்றாள். பிறந்த குழந்தையை குளிக்க வைப்பதற்காக அவள் மரத்தொட்டியில் போட்ட போது அத்த முதல் மரம் சந்தோஷமடைந்து ஒளிர்ந்தது. இந்த குழந்தையை விட பெரிய செல்வம் உலகில் கிடையாது. ஆகவே நான் ஆசைப்பட்டது நிறைவேறிவிட்டது என்று மகிழ்ந்தது. 

இது போலவே ஒரு நாள் மீன்பிடி படகில் மீனவன் ஒருவன் பயணம் செய்தான், திடீரென ஒரே இடி மின்னலாக இருந்தது. காற்றின் வேகத்தில் அந்த படகு கவிழ்ந்தது. அவன் படகின் பின்புறம் மறைந்து நீந்தி வந்தான். அந்த படகு ஒரு கவசம் போல மாற்றிக் கொண்டு அசுரக்காற்றில் இருந்து அவனை காப்பாற்றியது. ஒரு மனிதன் உயிரை காப்பாற்ற முடிந்ததே இதை விட வேறு என்ன சந்தோஷம் வேண்டும் என்று இரண்டாம் மரமும் சந்தோஷமடைந்தது. 

மூன்றாவது மரம் கவலைப்பட்டபடியே இருந்தது. இது போல தனக்கு எதுவும் நடக்கவில்லையே என்று நீண்ட நாளைக்குப் பிறகு கோவில் திருவிழா ஒன்றிற்காக தேர் செய்வதற்கு மரம் தேடினார்கள். விறகு வெட்டி தன்னிடமிருந்த மூன்றாவது மரத்தின் துண்டுகளை கோவில்பணிக்காகத் தந்தான். சாமி ஊர்வலம் வரும் தேர் செய்யப்பட்டது. அதில் சாமியை வைத்து ஊர்வலம் கொண்டுவர முயற்சி செய்தார்கள். அதற்காக தேர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. சாமியை கொண்டுவந்து தேரில் வைத்தார்கள். இப்போது மரம் தான் ஒரு தேராக உருமாறி சாமியைத் தானே சுமந்து போவதையும் தெருவில் தன்னைக் காணும் மனிதர்கள் எல்லோரும் தன்னை வணங்குவதையும் கண்டது.

 இதற்குத் தானே நான் ஆசைப்பட்டேன் என்று அது மனம் மகிழ்ந்தது. இப்படியாக மூன்று மரங்களும் தாங்கள் ஆசைப்பட்டது கிடைக்காத போதும் வாழ்வின் உண்மையான சந்தோஷங்கள் என்பது மற்றவருக்கு உதவுவது தான் என்பதை நன்றாகப் புரிந்து கொண்டுவிட்டன.

1 thought on “மூன்று கனவுகள் | நீதிக் கதைகள் | tamil kathaigal”

Leave a Comment