சண்டைச் சாமுராய் | நீதிக் கதைகள் | tamil story

ஜப்பானில் இருந்த கேய்கா கிராமத்தில் வசித்து வந்த மக்கள் அடிக்கடி திருடர்களின் தொல்லைக்கு ஆளானார்கள். ஒரே குடும்பமாக இருந்த ஒன்பது திருடர்கள் அந்த ஊரில் புகுந்து தானியங்களையும் நகை பணத்தையும் கொள்ளை அடிப்பதோடு ஆட்களைக் கொன்று குவிக்கவும் செய்தனர். 

இந்தத் திருடர்களை யாருமே அடக்க முடியவில்லை. அந்த ஊருக்கு ஒரு நாள் வாள்வீச்சில் புகழ் ரிகோ சாமராய் வந்திருந்தார். அவருக்கு கண்பார்வை கிடையாது. ஆனால் அவர் மிகப்பெரிய வாள் சண்டை வீரராக இருந்தார். 

கிராமத்திற்கு வந்த ரிகோ சாமுராய் அங்கிருந்த உணவகம் ஒன்றிற்கு சென்று சாப்பிடுவதற்காக தனக்கு ஒரு கிண்ணத்தில் அரிசி சாதத்தினை எடுத்து வரச் சொன்னார். கடைக்காரன் அதற்கு பணம் கேட்டான். அதற்கு ரிகோ என்னிடம் பணமில்லை சாப்பிட்ட கடனுக்கு நான் ஏதாவது வேலை செய்கிறேன் என்றார்.

நிச்சயம் திருடர்களை நானே அழிக்கிறேன். பசிக்கிறது உணவு கொடுங்கள் என்று ரிகோ சாப்பாடு கேட்டார். கடைக்காரரும் சாப்பாடு கொண்டுவந்தார். தன்னுடைய இருக்கையில் அமர்ந்த ரிகோ இடையிலிருந்த வாளை உருவி தனக்கு எதிரில் வைத்து விட்டு கிண்ணத்தில் வந்த சோற்றினை வெட்டும் குச்சியால் (சாப்ஸ்டிக் ) சாப்பிட ஆரம்பித்தார். உன்னால் என்ன வேலை செய்ய முடியும் என்று கேட்டார்கள். எதையும் செய்ய முடியும் என்றார் ரிகோ இந்த ஊரில் திருட்டுத் தொல்லை அதிகமாக இருக்கிறது, உன்னால் அதை கட்டுப்படுத்த முடியுமா என்று கேட்டார் உணவக அதிபர். 

கிராம மக்கள் தங்களைக் கொல்வதற்காக ஒரு குருட்டு சாமுராயை ஏற்பாடு செய்துள்ளதை அறிந்த ஒன்பது திருடர்களும் மறைவாக சாமுராய் சாப்பிடும் உணவகத்திற்கு வந்து யாருக்கும் தெரியாமல் அவரைக் கொல்ல நோட்டமிட்டனர். 

 சாமுராய்யின் தலைக்கு மேல் ஈக்கள் பறந்து கொண்டிருந்தன. சாமுராய் தலைக்கு மேல் உள்ள ஈக்களை நிமிர்ந்து பார்க்காமல் அதன் சப்தத்தை வைத்தே எவ்வளவு உயரத்தில் பறக்கிறது என்று முடிவு செய்து கொண்டு தனது சாப்ஸ்டிக்கை பயன்படுத்தி மேலே பறந்து கொண்டிருந்த ஈயினை அடித்தார். 

ஒரே அடி ஒரு ஈ செத்துப்போனது. இப்படி ஒன்பது அடியில் ஒன்பது ஈக்களும் செத்துக் கீழே விழுந்தது. எதுவும் நடக்காதவரைப் போல அவர் மெதுவாக உணவகத்தை விட்டு வெளியேறி தெருவில் நடந்து போக ஆரம்பித்தார். 

திருடன் தனது வளர்ப்பு நாயை அனுப்பி அவரைக் கடிக்க செய்தான். நாய் குரைத்தபடியே தாவியது. சாமுராய் காற்றில் ஏற்பட்ட அதிர்வை வைத்து தன் கையில் இருந்த சாப்ஸ்டிக்கை வீசி அடித்தார். 

அடி தாங்க முடியாமல் நாய் அலறி ஒடியது. என்ன விந்தை இது என்று திருடர்கள் பயந்து போனார்கள். சாமுராய் வீதியில் நடந்து வந்தபோது ஒரு மரத்தில் ஒளிந்து கொண்ட முதல் திருடன் அவர் மேல் அம்புவிட முயற்சி செய்தான். 

அவரோ நடந்தபடியே கீழே கிடந்த ஒரு கல்லை  எடுத்து மரத்தை நோக்கி வீசினார். அது திருடனின் கண்ணில் பட்டு கண்ணைத் துளைத்துப் போனது. அவனும் அலறியபடியே விழுந்தான். 

அடுத்த திருடன் ஒரு குதிரை மீது ஏறியபடியே வேகமாக வந்து அவர் கழுத்தை துண்டாக்க முயற்சி செய்தான். அவரோ உடைந்த மண்பானையின் சில்லை எடுத்து வீசினார். அது பறந்து போய் குதிரையில் வந்த திருடனின் பல்லை உடைத்தது. அவன் அலறிக் கொண்டு ஓடினான். 

அடுத்த திருடன் தன் தம்பிகள் மூவருடன் ஒரு சந்தில் மறைந்து நின்று அவரைத் தாக்க முயற்சித்தான. அவர் ஒரு குச்சியை ஐந்தாக உடைத்து அதை சரட்டென வீசி எறிந்தார். அந்த குச்சிகளோ கத்தி போலாகி அவர்கள் கழுத்தில் சொருகி நின்றது. 

அடுத்த திருடன் உடல் முழுவதும் எண்ணெய் பூசிக் கொண்டு கையில் கட்டாரியோடு அவரை நேரடியாக மோதிக் கொல்ல முயற்சி செய்தான். சாமுராய் சிரித்தபடியே புழுதி மண்ணை அள்ளி அவன் மீது வீசினார்.உடலில் இருந்த எண்ணெய்யில் புழுதி நன்றாக ஒட்டிக் கொண்டது. அருகில் இருந்த பிச்சைக்காரனின் திருவோட்டைப் பிடுங்கி திருடன் மீது வீசினார். அது ஒரு கேடயம் வீசப்படுவது போல திருடன் முகத்தை தாக்கவே அவன் அலறியபடியே விழுந்தான்.

கடைசியாக எட்டு திருடர்களின் தாத்தாவான பெரிய திருடன் வந்தான். அவன் ஒரே நேரத்தில் ஒன்பது கத்திகள் வீசக்கூடியவன். அவன் சாமுராய் முன்னால் வந்து நின்று டேய் உன்னை இப்போதே கொல்கிறேன் பார் என்று பாய்ந்தான். சாமுராய் அந்தப் பக்கம் காய்கறி விற்றுக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் இருந்த தர்பூசணியை எடுத்து அந்த கத்தி வீச்சைத் தடுத்தபடியே ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து சுழற்றி வீசினார். 

அது திருடன் மூக்கில் பட்டு ரத்தம் கொட்டியது. மறுநிமிசம் அவர் ஒரு வெங்காயத்தை எடுத்து சுழற்றி அதிவேகமாக வீசவே அது புருவத்தில் பட்டு கண்ணை சிதறடித்தது. அத்தோடு அவர் எடைக்கல் எடுத்து வானில் வீசி எறியவே அது திருடன் தலையில் பட்டதும் கிறங்கிக் கீழே விழுந்தான். 

அவன் அலறியபடியே ‘ சாமுராய் வீரனே, நீ வாளை எடுக்காமலே பெரிய வீரன் என்று உன்னை நிரூபித்துவிட்டாய், இது எப்படி சாத்தியமானது என்று கேட்டான்.’ அதற்கு சாமுராய் “நண்பா, உண்மையான ஆயுதம் என்பது நமது கண்களும் காதுகளும் கை கால்களும் தான். இதை விட திறமையான ஆயுதம் எதுவும் உலகில் கிடையாது. வாளும் கத்தியும் கேடயமும் துப்பாக்கியும் நாம் கண்டுபிடித்தவை அவை முக்கியமானவை அல்ல. அதை பயன்படுத்தும் மனிதன் தான் முக்கியமானவன். 

என் மனதில் பயமில்லை அச்சமில்லை, எவன் மனதில் பயமில்லையோ அவன் எதையும் கண்டு அஞ்சமாட்டான் எவன் தனது கண்களையும் காதுகளையும் கைகால்களையும் விழிப்போடு பயன்படுத்துகிறானோ அவனுக்கு ஆயுதமே தேவை கிடையாது. 

நம் உடல் தான் உலகின் பழமையான ஆயுதம். உடலை உறுதியாக வைத்துக் கொண்டு மனதை அமைதியாக வைத்துக் கொண்டால் ஆயிரம் பேர் சண்டையிட வந்தாலும் நாம் எளிதாக ஜெயித்துவிடலாம். 

திருடிப் பிழைப்பது அவமானம். உழைத்து முன்னேறு” என்று சொல்லிவிட்டு அந்த கிராம மக்களிடம் தனக்கு உணவு அளித்ததற்கு நன்றி சொல்லிவிட்டு அடுத்த ஊரை நோக்கி நடந்து போனார் ரிகோ சாமுராய். 

(ஜப்பானிய சாமுராய் கதையின் எளிய வடிவம்)..

Leave a Comment